‘வாட்ஸ்அப் குழு உதவியது’ - கலவரத்திற்கு மத்தியில் தாயகம் திரும்பிய தமிழக மாணவர்கள்!
Students Arrived in Tamil Nadu From Bangladesh : வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்திற்கு மத்தியில், முதற்கட்டமாக 20 மாணவர்கள் பத்திரமாக தற்போது தமிழகம் வந்துள்ள நிலையில், இன்று 77 மாணவர்கள் தமிழகம் வர விருப்பம் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Students Arrived in Tamil Nadu From Bangladesh: அரசு வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டு முறையில் மாற்றம் செய்து திறமையின் அடிப்படையில் வேலை வழங்க வங்கதேச உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 93 சதவீத இடங்களை திறமையின் அடிப்படையிலும், 7 சதவீதம் இடஒதுக்கீட்டு அடிப்படையிலும் நிரப்புமாறு தீர்ப்பில் கூறியுள்ளது.
இடஒதுக்கீடு நடைமுறை வங்கதேச அரசுப் பணியிடங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீதம், பின் தங்கிய மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 10 சதவீதம், பெண்களுக்கு 10 சதவீதம், சிறு பான்மையினருக்கு 5 சதவீதம், மாற்றுத் திறனாளிகளுக்கு 1 சதவீதம் என 56 சதவீத இடஒதுக்கீடு நடைமுறை அமலில் உள்ளது.
மாணவர்களின் போராட்டம் 1971ஆம் ஆண்டு வங்கதேச சுதந்திரப் போரில் போராடிய வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் கொடுக்கப்பட்டு வரும் 30 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் எனவும் திறமையின் அடிப்படையிலேயே பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் வங்கதேச மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாட்டில் அதிகரித்துள்ள வேலையின்மையால் தவித்து வரும் மாணவர்கள் இந்த 30 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டும் திரும்பப்பெற வேண்டும் எனவும், பெண்கள் மாற்றுத்திறனாளிகள், பின்தங்கிய மாவட்டத்தில் உள்ளவர்களுக்கான இடஒதுக்கீடு தொடரட்டும் எனவும் கூறி வந்தனர். மாணவர்கள் போராட்டத்தின் காரணமாக ஹசீனா அரசு 2018ஆம் ஆண்டு அந்த இட ஒதுக்கீட்டை நிறுத்தியது. ஆனால் கடந்த ஜூன் மாதம் வங்கதேச உயர் நீதிமன்றம் இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தியதை தொடர்ந்து ஜூலை 5 முதல் மீண்டும் போராட்டம் வெடித்தது. போராட்டம் வன்முறையாக மாறியது.
இந்நிலையில், வங்கதேசத்திற்கு கல்வி நிமித்திமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வங்கதேசம் சென்றிருந்த தமிழக மாணவர்களை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு இறங்கியது. தற்போது முதற்கட்டமாக 20 மாணவர்கள் பத்திரமாக தற்போது தமிழகம் வந்துள்ளனர். இன்று 77 மாணவர்கள் தமிழகம் வர விருப்பம் தெரிவித்து உள்ளார்கள். அங்கு உள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு கட்டணம் இல்லாத தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் அங்கு இருக்கக்கூடிய மாணவர்களை இங்கு கொண்டு வர கூடிய பணி நடைபெற்று வருகிறது.
வங்கதேசத்தில் இருந்து சென்னை திரும்பிய மாணவி ஒருவர் கூறுகையில், “அங்கு நாங்கள் நிறைய சிரமங்கள் சந்தித்தோம்,உணவு இணைய வசதி இல்லாமல் இருந்தோம்,பிறகு தமிழக அரசால் தற்போது இங்கு பாதுகாப்பாக வந்து உள்ளோம். 144 தடை உத்தரவு செய்யப்பட்டுள்ளதால் எங்களால் வெளியே செல்ல முடியவில்லை. தமிழகம் மற்றும் இந்திய மாணவர்கள் யாரும் அங்கு தாக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.
மாணவர் சஞ்சய் கிருஷ்ணா, “தமிழக மாணவர்கள் நிறைய பேர் அங்கு உள்ளார்கள், நாங்கள் எல்லையில் இருக்கவே நாங்கள் முதலில் இங்கு வந்து விட்டோம். இன்னும் நிறைய பேர் அங்கு உள்ளார்கள். அங்கு இணைய வசதி முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு மீண்டும் இது போன்ற செயல் நடக்காது என்று அரசு சொல்லும் வரை நாங்கள் அங்கு செல்ல மாட்டோம். மாணவர்கள் வைத்திருந்த வாட்ஸ்அப் குழு எங்களுக்கு உதவியாக இருந்தது. அதன் மூலம் தகவல் திரட்டினோம்” என்று தெரிவித்தார்.
பங்களாதேஷில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடை மாணவர்களை வரவேற்றபின் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “15000 பேர் இதுவரை வெளிநாடு சென்றுள்ளதாக பதிவு செய்து உள்ளனர். வங்கதேசத்தில் இருந்து படிப்பிற்காக சென்ற மாணவர்கள் சென்னை திரும்பினர். 2 விமானங்கள் மூலம் 20 மாணவர்கள் திரும்பி உள்ளனர். மாணவர்களுக்கு விமான கட்டணம் உள்ளிட்ட அனைத்துமே தமிழக அரசு இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டது” என்றார்.
What's Your Reaction?