தமிழ்நாட்டிற்கு தினமும் 1 டிஎம்சி நீர்... கர்நாடக அரசு இன்று காவிரியில் தண்ணீர் திறக்குமா..?
ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி கர்நாடக அரசு இன்று முதல் தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடவுள்ளது.
சென்னை: காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு 28 சதவீதம் குறைவாக உள்ளதாக கூறப்பட்டது. இதனால் நீர் திறப்பது தொடர்பான எந்தவிதமான முடிவுகள் எடுப்பதாக இருந்தாலும், வரும் 25ம் தேதி வரை காத்திருக்க வேண்டும் எனவும் கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்த தமிழகம் தரப்பு, கடந்த வருடம் போதுமான நீரை திறந்துவிடவில்லை என்றும், பிப்ரவரி முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறக்கவில்லை என குற்றம்சாட்டியது.
மேலும் இதன் காரணமாக நீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இருதரப்பு வாதங்களை கேட்ட ஒழுங்காற்று குழு, இன்று முதல் வரும் 31ம் தேதி வரை தினமும் தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி நீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. அதேபோல், தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவை சென்றடையும் நீரின் அளவு 1 டி.எம்.சி.யாக இருப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டு பரிந்துரைத்தது. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின் பேரில் தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு இன்று முதல் வரும் 31ம் தேதி வரை, காவிரி ஆற்றில் நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, முதல்போக பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. தமிழக அரசின் உத்தரவின் பேரில், 2024-2025 ஆம் ஆண்டு முதல்போக பாசனத்திற்கு, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து, காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் நவம்பர் 8ம் தேதி வரை, 120 நாட்களுக்கு 5,184 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஈரோடு மாவட்டம், பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன. இதேபோல் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்களிலுள்ள பாசன நிலங்களுக்கும் 8,812.80 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது.
What's Your Reaction?