டெல்லி: கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதைப் பொருட்களை சட்டவிரோதமாக கடத்தியதாக ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டார். சினிமா தயாரிப்பாளர், அரசியல்வாதி, தொழிலதிபர் என பல முகங்கள் கொண்ட ஜாபர் சாதிக், போதைப்பொருட்கள் கடத்தலிலும் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மிக்ஜாம் புயல் பாதிப்பின் போது, இயக்குநர் அமீர் தமிழக அரசு நிவாரண நிதியாக முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து 10 லட்சம் ரூபாய் வழங்கினார். அப்போது இயக்குநர் அமீருடன் ஜாபர் சாதிக்கும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் இயக்குநர் அமீருக்கும் தொடர்புள்ளதா என்றும் விசாரணை நடைபெற்றது. அதேபோல் ஜாபர் சாதிக் தயாரிப்பில் அமீர் இயக்கி வந்த படத்தின் படப்பிடிப்பும் பாதியிலேயே ட்ராப் ஆனது. அதேபோல், திமுக அயலக பிரிவு அணியில் உறுப்பினராக இருந்த ஜாபர் சாதிக், கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனிடையே தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக், கடந்த மார்ச் மாதம் மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, ஜாபர் சாதிக் மீது சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தியதாகவும், சட்ட விரோதமாக பணப்பரிவர்த்தனை செய்ததாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
அதேபோல், சென்னை பெருங்குடி அருகே ஜாபர் சாதிக் தங்கியிருந்த வாடகை வீட்டிலும் மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கை என்.சி.பி. அதிகாரிகள் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரித்தனர். அதன் பின்னர் 3 நாட்கள் கூடுதலாக அனுமதி பெற்றிருந்த அதிகாரிகள், அவரை சென்னை அழைத்து வந்தும் விசாரித்தனர். அப்போது ஜாபர் சாதிக் நெட்வொர்க்கில் யார் யாரெல்லாம் உள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றது. இன்னொரு பக்கம் இயக்குநர் அமீரிடமும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது டெல்லி போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றம். அதன்படி, திங்கட்கிழமை தோறும் கையெழுத்திட வேண்டும் என்றும், செல்போனை எப்போதும் இயக்கத்தில் வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அதேபோல், ஜாபர் சாதிக் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முக்கியமாக நிபந்தனை ஜாமீன் கொடுத்தாலும் ஜாபர் சாதிக்கால் சிறையில் இருந்து வெளியே வர முடியாதபடி அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.