மோடி பிறந்தநாள்... வில்லன்கள் குறித்து பேசுவதில்லை - சு.வெங்கடேசன் ஓபன் டாக்!

நான் என்னுடைய ஹீரோவை தான் பேசுவேன் வில்லன்கள் குறித்து பேசுவது எனக்கு வேலை இல்லை, தந்தை பெரியார் தின வாழ்த்துகள் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Sep 17, 2024 - 15:09
 0
மோடி பிறந்தநாள்... வில்லன்கள் குறித்து பேசுவதில்லை - சு.வெங்கடேசன் ஓபன் டாக்!
வில்லன்கள் குறித்து பேசுவதில்லை - சு.வெங்கடேசன் ஓபன் டாக்

மதுரையில் இன்று சு.வெங்கடேசன் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பது அனைவரது ஆசை., தமிழ்நாட்டுக்கு வரும் முதலீடுகளை தென் மாவட்டங்களுக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசு கூடுதல் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலான முதலீடுகள் சென்னை மற்றும் வட மற்றும் மேற்கு மாவட்டங்களில் மட்டும்தான் வருகிறது. தென் மாவட்டங்கள் தொடர்ந்து பின் தங்கியிருக்கிறது. அதை முறியடிப்பதற்கு முதலீடு செய்ய வருபவர்கள் ஒரு மாநிலத்தில் சமமான வளர்ச்சியை கொண்டு வர விரும்ப மாட்டார்கள். அதை ஒரு அரசு தான் செய்ய வேண்டும்.

தென்மாவட்டத்தில் முதலீடு செய்தால், தொழில்களை துவங்கினால் கூடுதல் முன்னுரிமையும், கூடுதல் சலுகையும் வழங்கி வருகின்ற முதலீடுகளை மதுரையை மையப்படுத்திய முதலீடுகளாக மாற்ற தமிழக முதல்வர் முயற்சி செய்ய வேண்டும். 

தமிழகத்தில் கொண்டு வந்துள்ள முதலீடுகளை நான் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். வருகின்ற முதலீடுகளில் தென் மாவட்டங்களுக்கு போதுமானதாக இல்லை! தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு கூடுதல் முன்னுரிமை கொடுத்து, தென்மாவட்ட வளர்ச்சிக்கு தமிழக முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். தென் மாவட்டங்களில் வளர்ச்சி மிக மிக தேவையான ஒன்று! மிகப்பெரிய நிறுவனங்கள் மதுரையை மையப்படுத்திய முதலீட்டை உருவாக்கிய காலமாக இந்த காலம் இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடரில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பதில் அளித்தார். டெண்டர் விடுவதில் டெக்னிக்கல் எரர் ஆகிவிட்டது என தெரிவித்தார். அதிகாரப்பூர்வமான ஒப்பந்தத்தில் தொழில்நுட்ப பிரச்சனை இருப்பதால் நாங்கள் பட்டியலில் சேர்க்கவில்லை என 25 நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் சொல்லியிருந்தார். உங்களுடைய டெக்னிக்கல் எரர் எப்ப தான் முடியும்? எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்கள் மட்டும் டெக்னிக்கல் எரர் வந்து கொண்டே இருக்கிறது! மதுரை எய்ம்ஸ்க்கு மட்டும் எத்தனை முறை டெக்னிக்கல் எரர் வரும்? மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது 16 வது நாடாளுமன்றத்தில் தொகுக்கப்பட்ட திட்டம் இது” என்றார்.

மேலும் படிக்க: பெரியார் திடலுக்கு நேரில் போன தவெக தலைவர் விஜய்.. ரோஜா பூக்களை கையில் ஏந்திய பணிவு.. திராவிட பாதையா?

தொடர்ந்து பேசிய அவரிடம் பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அவர், “இந்தியாவே கொண்டாட வேண்டிய ஒரு பிறந்த நாள் என்பது தந்தை பெரியாரின் பிறந்த நாள். நான் என்னுடைய ஹீரோவை தான் பேசுவேன். வில்லன்களை பேசுவது எனக்கு வேலை இல்லை. நான் என்னுடைய கதாநாயகனை கொண்டாடுவேன். அனைவருக்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow