பெரியார் திடலுக்கு நேரில் போன தவெக தலைவர் விஜய்.. ரோஜா பூக்களை கையில் ஏந்திய பணிவு.. திராவிட பாதையா?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த கையோடு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Sep 17, 2024 - 15:04
Sep 17, 2024 - 15:07
 0
பெரியார் திடலுக்கு நேரில் போன தவெக தலைவர் விஜய்.. ரோஜா பூக்களை கையில் ஏந்திய பணிவு.. திராவிட பாதையா?
vijay tribute to thanthai periyar statue

அரசியல் கட்சி தலைவராக தனது பணியை பெரியார் திடலில் இருந்து தொடங்கியுள்ளார் தவெக தலைவர் விஜய். பெரியார் பிறந்தநாளான இன்றைய தினம் நேரடியாக பெரியார் திடலுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். 

தந்தை பெரியாரின் 146வது பிறந்நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். நடிகரும் தவெக தலைவருமான விஜய் முதலில் மோடி பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறினார். இதனையடுத்து பெரியார் பிறந்தநாளுக்கும் வாழ்த்து சொன்னார். நேரடியாக பெரியார் திடலுக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டு கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர். மக்களை பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்.சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதி பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என்று கூறியிருந்தார். 

இதனையடுத்து விஜய் அரசியல் பயணம் திராவிட பாதையா? என்ற கேள்வி எழுந்தது. அவர் வாழ்த்து கூறிய சில மணி நேரங்களில் தனது வீட்டில் இருந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு புஸ்ஸி ஆனந்துடன் நேரில் வந்தார் விஜய். காரை விட்டு இறங்கி கையில் ரோஜா மலர் மாலையும் பூக்கள் நிரம்பிய தட்டினையும் கையில் எடுத்துக்கொண்டு பெரியார் சிலை அருகே சென்றார் விஜய். பூக்களை தூவி மாலையை வைத்து கைகளை கூப்பி பெரியாரை வணங்கினார் விஜய். 

விஜய் மாணவர்கள் மத்தியில் பேசும் போதே மறைந்த தலைவர்கள் பற்றி பேசியிருக்கிறார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதன் முறையாக நேரடியாக பெரியார் திடலுக்கு வந்து பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இதன் மூலம் அரசியலில் தான் பயணிக்கும் பாதையை வெளிப்படுத்தியுள்ளாரா விஜய் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow