IND vs BAN: முதல் டெஸ்டில் முக்கிய வீரர் மிஸ்ஸிங்.. 11 வீரர்கள் கொண்ட அணி அறிவிப்பு

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 11 வீரர்கள் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Sep 17, 2024 - 14:53
Sep 17, 2024 - 15:02
 0
IND vs BAN: முதல் டெஸ்டில் முக்கிய வீரர் மிஸ்ஸிங்.. 11 வீரர்கள் கொண்ட அணி அறிவிப்பு
பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள்

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. 2வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து முதல் டி20 போட்டி அக்டோபர் 7ம் தேதியும், 2வது டி20 போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 3வது டி20 போட்டி அக்டோபர் 13ம் தேதியும் நடைபெற உள்ளன. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ‘பிளேயிங் 11’ இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய அணி கடைசியாக, 2024 மார்ச் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று இருந்தது. தொடர்ந்து டி20 உலகக்கோப்பை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர்களை கைப்பற்றிய உற்சாகத்தோடு இந்திய அணி உள்ளது.

அதே சமயம் வங்கதேச அணியோ, சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் எதிரான டெஸ்ட் தொடரை, பாகிஸ்தான் மண்ணிலேயே 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருந்தது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 45.83 சதவிகத்துடன் 4ஆவது இடத்தில் உள்ளது. இதனால், இந்த தொடரில் சிறப்பாக விளையாடி, புள்ளிப் பட்டியலில் முன்னேறும் உத்வேகத்துடன் ஆடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் என்பதால், இந்த தொடர் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலு, கவுதம் கம்பீர் தலைமையில், விராட் கோலி, ரோஹித் சர்மா எப்படி விளையாடப்போகிறார்கள் என்று ரசிகர்கள் வெகு ஆர்வமாக உள்ளனர்.

இந்திய அணியை பொறுத்தவரை, தொடக்க வீரர்களாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் விளையாட உள்ளனர். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் கடந்த சில இன்னிங்ஸ்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில், இரட்டை சதம் விளாசி இருந்ததோடு தொடர் நாயகன் விருதும் பெற்றிருந்தார்.

3ஆவது வீரராக சுப்மன் கில் களமிறப்படுவார். சுப்மன் கடைசியாக இங்கிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியில், 110 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 4ஆவது வீரராக ‘ரன் மெசின்’ என்று அழைக்கப்படும் கிங் கோலி விளையாடவுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான, ரன்களை குவித்து, தனது சாதனையை அதிகப்படுத்தப் போகிறார் என்பது உறுதி.

5ஆவது வீரராக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ள ரிஷப் பண்ட் களமிறக்கப்படுவார். விபத்தால் காயமடைந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், 634 நாட்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2024 தொடரிலும், டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்று சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தார்.

சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால், 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் 3 பேர் அணியில் இடம் பிடித்துள்ளனர். குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இது, சொந்த மைதானம் என்பதால், இந்திய அணிக்கு தனது அனுபவத்தால் வெற்றியை தேடித் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் தவிர, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாஸ்பிரிட் பும்ரா மற்றும் மொஹமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். ஜாஸ்பிரிட் பும்ரா கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக பந்துவீசி, இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான கடந்த டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கூட, அற்புதமாக பந்துவீசி இருந்தார்.

மேலும், அந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய பும்ரா 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். மேலும், 2024 டி20 உலகக்கோப்பை தொடரில், 15 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் அக்‌ஷர் பட்டேல் இடம்பெறவில்லை. கடந்த சில காலமாக இந்திய அணிக்கு அனைத்து வித ஃபார்மெட்டிலும், அக்‌ஷர் பட்டேல் சிறப்பாகவே விளையாடி வந்தார். ஆனாலும், ஏற்கனவே மூன்று ஸ்பின்னர்கள் அணியில் இடம்பெற்றுள்ளதாலும், ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பியுள்ளதாலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow