ஆடிப்பெருக்கு நாளில் பட்டாபிஷேகம்.. துணை முதல்வராகும் உதயநிதி.. வெளியான குட்நியூஸ்

Aadi Perukku Day 2024 : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்(Udhayanidhi Stalin) ஆடிப்பெருக்கு நாளில் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jul 23, 2024 - 11:13
Jul 23, 2024 - 11:38
 0
ஆடிப்பெருக்கு நாளில் பட்டாபிஷேகம்.. துணை முதல்வராகும் உதயநிதி.. வெளியான குட்நியூஸ்
Udayanidhi Stalin Deputy CM

Aadi Perukku Day 2024 : எந்த பொறுப்புகள் தேடி வந்தாலும் தனது மனதிற்கு நெருக்கமான பொறுப்பு இளைஞரணி செயலாளர்தான் என்று சில நாட்களுக்கு முன்பு பேசினார் உதயநிதி(Udhayanidhi Stalin). துணைமுதல்வர் பதவி(Deputy CM) தரப்போவதாக வெளியான செய்தி வெறும் வதந்திதான் என்று சொன்னாலும் ஆடிப்பெருக்கு நாளில்(Aadi Perukku) பட்டாபிஷேகம் நடைபெறப்போவது உறுதிதான் என்று அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


திமுகவின்(DMK) அடுத்த தலைவர் உதயநிதிதான் என்பதை நிர்வாகிகளும், எம்எல்ஏ, எம்.பிக்களும், அடிமட்ட தொண்டர்களும் உணர ஆரம்பித்து விட்டனர். இதன் எதிரொலியாகவே மக்களவையில் எம்.பிக்கள் பதவியேற்ற போது பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் பெயரை சொல்லிவிட்டு உதயநிதி பெயரையும் சொல்லி வாழ்க முழக்கமிட்டனர். எங்களின் எதிர்காலம் வாழ்க என்றும் சொன்னார்கள் சில எம்பிக்கள். 

அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சொன்னார் உதயநிதி. என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றும் சொன்னார் திமுக தலைவர் ஸ்டாலின்(DMK Leader Stalin). கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின்(Udhayanidhi Stalin). திமுக அமோக வெற்றி பெற்றதை அடுத்து உதயநிதி ஸ்டாலினுக்க திமுகவில் இளைஞரணி செயலாளராக பொறுப்பு அளிக்கப்பட்டது. 

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு(CM Stalin America Tour) செல்லப்போகும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் மிக முக்கியமான அறிவிப்பையும் வெளியிடப்போகிறாராம் முதல்வர் ஸ்டாலின். துணை முதல்வர் பொறுப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. திமுக பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதை அடுத்து முதல்வரானார் மு.க ஸ்டாலின். திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வெறும் எம்எல்ஏவாகவே மக்கள் பணியாற்றினார். 

அதே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் நடத்தும் மிக முக்கியமான கூட்டங்களில் பங்கேற்றார் உதயநிதி. அமைச்சர்கள் வழங்கும் நலத்திட்ட உதவிகள் கூட்டங்களில் உதயநிதி பங்கேற்றார். எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பலரும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று தீர்மானவே நிறைவேற்றினர். இதனையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். 

நாளுக்கு நாள் உதயநிதி ஸ்டாலினின் முக்கியத்துவம் கட்சியிலும் ஆட்சியிலும் கூடிக்கொண்டே போகிறது. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகிறது. இந்த நிலையில்தான் கடந்த ஜனவரி மாதமே உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.ஆனால் அது பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 

கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடும் போது, துணை முதல்வர் குறித்த கேள்வி எழுந்தது அதற்கு உதயநிதி ஸ்டாலின், அதை எல்லாம் முதல்வர் முடிவெடுப்பார் என்று கூறினார். அதாவது துணை முதல்வர் பற்றி முதல்வர் முடிவு எடுக்கட்டும் என்று உதயநிதி சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியானது. 

இளைஞரணி கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் எல்லாம் வதந்திதான் என்றார். எந்த பொறுப்பு கொடுத்தாலும் எனது மனதிற்கு நெருக்கமான பதவி இளைஞரணி செயலாளர்தான் என்று கூறினார். அவரே தனது பதவி குறித்து ஹிண்ட் கொடுத்துள்ளார். 

இது குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பிய போது, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்போவதாக பல இடங்களில் பேசப்படுகிறது. ஆனால், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் முடிவெடுப்பார். உதயநிதி முறையாக வளர்ந்தவர். கட்சியின் சட்டங்களுக்கு உட்பட்டவர்.நான் 60 ஆண்டுகளை கட்சிக்காகவே அர்ப்பணித்தவன். எனதுவளர்ச்சி, எனது குடும்பத்தைவிட, கட்சியையே பெரிதாக கருதுபவன்.எனவே, கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்போம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்து உள்ளார்களாம்.ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆடிப்பெருக்கு நாளில் துணை முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாம். ஆடிப்பெருக்கு நாளில் தொடங்கபடும் நல்ல காரியங்கள் சிறப்பானதாக பல்கி பெருகும் என்பது நம்பிக்கை. எனவேதான் அன்றைய தினம் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை அறிவிக்க உள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow