Kulasekarapattinam Spaceport : இஸ்ரோவிற்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்க இடம் வழங்கிய தமிழக அரசு!

ISRO Rocket Launch Pad in Kulasekarapattinam Spaceport : தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தை இஸ்ரோவிற்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Aug 17, 2024 - 10:10
Aug 17, 2024 - 14:39
 0
Kulasekarapattinam Spaceport : இஸ்ரோவிற்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்க இடம் வழங்கிய தமிழக அரசு!
இஸ்ரோவிற்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்க இடம் வழங்கிய தமிழக அரசு

ISRO Rocket Launch Pad in Kulasekarapattinam Spaceport : இந்தியாவின் சுதந்திர தினம் நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட்ட நிலையில் ஒரு சிறிய ரக ஏவுகணை இந்தியாவின் பெரிய கனவுகளை சுமந்துகொண்டு நேற்று (ஆகஸ்ட் 16) விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பூமியைக் கண்காணிக்கும் செயல்பாடுகளுக்காக 175. 5 கிலோ எடை மற்றும் 420 வாட்ஸ் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட அதி நவீன இ.ஒ.எஸ்-08 எனும் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கை கோள்களுடன் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய SR-Zero DemoSAT எனப் பெயரிடப்பட்ட இரண்டு செயற்கைகோள்கள் என மூன்று செயற்கைக் கோள்கள் நேற்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. 

இந்த செயற்கைக்கோள்களானது சிறிய ரக SSLV D3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 9.17 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. குறிப்பாக 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டானது உந்துசக்தி திட எரிபொருளை கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் இறுதிகட்டப்பணியான கவுண்டவுன் அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கிய நிலையில், ஏவுகணை காலை 9.17 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது.

இந்த ராக்கெட்டானது பூமியில் இருந்து புறப்பட்டு சரியாக 13 நிமிடத்தில் திட்டமிட்ட இலக்கான 475 கிலோ மீட்டர் தூரத்தில் பிரதான செயற்கைகோளான இ.ஓ.எஸ்.8-யும், தொடர்ந்து 16-வது நிமிடத்தில் மாதிரி செயற்கைகோள்களும் நிலை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயற்கைக்கோள் பூமியை 24 மணி நேரமும் புகைப்படம் எடுத்து கண்காணிக்கும் எனவும், பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ கண்டறிதல் போன்ற பயன்பாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க: எலான் மஸ்க்கிற்கு ஆப்பு... ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

இந்நிலையில் நேற்று ஏவப்பட்ட இ.ஒ.எஸ்-08 செயற்கைக்கோளை SSLV D3 ராக்கெட் திட்டமிட்ட இலக்கில் நிலை நிறுத்தியது. இதுகுறித்து பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், “SSLV D3 ராக்கெட் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை அடுத்து இனி வணிக ரீதியாக செயல்படுத்தப்படும். SSLV D3 ராக்கெட் செலுத்தப்பட்ட செயற்கைகோள்கள் விண்வெளியில் புற ஊதா கதிர்கள், காமா கதிர்கள் விண்வெளியில் எப்படி இருக்கிறது? என்பதை கண்டறிந்து தகவல் தெரிவிக்கும். இது ககன்யான் திட்டத்திற்கு உதவியாக இருக்கும். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும். அதற்கு முன்னதாக ஆளில்லா முதல் சோதனை ராக்கெட் திட்டம் வருகிற டிசம்பரில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கான ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வந்துள்ளது. அதற்காக ஒருங்கிணைப்பு பணிகள் அடுத்த சில மாதங்களில் முடிக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்(Kulasekarapattinam Spaceport) அமைப்பதற்கான இடத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இதற்கான தொடக்கப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தெற்கு திசைக்கு அனுப்ப வேண்டிய செயற்கைகோள்கள் அனைத்தும் குலசேகரப்பட்டினத்தில் இருந்து அனுப்பப்படும்” என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow