ISRO EOS 08 Satellite launch SSLV D3 Today : இந்தியாவின் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் ஒரு சிறிய ரக ஏவுகணை இந்தியாவின் பெரிய கனவுகளை சுமந்துகொண்டு இன்று விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பூமியைக் கண்காணிக்கும் செயல்பாடுகளுக்காக 175. 5 கிலோ எடை மற்றும் 420 வாட்ஸ் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட அதி நவீன இ.ஒ.எஸ்-8 எனும் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கை கோள்களுடன் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய SR-Zero DemoSAT எனப் பெயரிடப்பட்ட இரண்டு செயற்கைகோள்கள் என மூன்று செயற்கைக் கோள்கL இன்று விண்ணுக்கு செல்ல உள்ளது.
இந்த செயற்கைக்கோள்களானது சிறிய ரக SSLV D3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.17 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. குறிப்பாக 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டானது உந்துசக்தி திட எரிபொருளை கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் இறுதிகட்டப்பணியான கவுண்டவுன் அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கிய நிலையில், ஏவுகணை காலை 9.17 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
இந்த ராக்கெட்டானது பூமியில் இருந்து புறப்பட்டு சரியாக 13 நிமிடத்தில் திட்டமிட்ட இலக்கான 475 கிலோ மீட்டர் தூரத்தில் பிரதான செயற்கைகோளான இ.ஓ.எஸ்.8-யும், தொடர்ந்து 16-வது நிமிடத்தில் மாதிரி செயற்கைகோள்களும் நிலை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயற்கைக்கோள் பூமியை 24 மணி நேரமும் புகைப்படம் எடுத்து கண்காணிக்கும் எனவும், பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ கண்டறிதல் போன்ற பயன்பாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய UR Rao Satellite Center (URSC) இயக்குநர் டாக்டர் எம். சங்கரன், “இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மாணிக்கும் புதிய தொழில்நுட்பங்களுடன் இந்த ஏவுகணை இன்று ஏவப்படவுள்ளது. இஸ்ரோ நிறுவனம் தற்போது புதிதாக 21 புதிய தொழில்நுட்பங்களை சோதனை செய்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் எதிர்காலம் பிரமாண்டதாக அமையும்” என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பேசிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எஸ். சோம்நாத், “மிகவும் எளிமையான வடிவமைப்புக்கொண்ட SSLV, தொழில்துறையில் ஒரு மிகப்பெரிய புரட்சியை உருவாக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.