கடல் போல காட்சி அளிக்கும் மேட்டூர் அணை.. 71வது முறையாக 100 அடியை தொட்டது.. ஸ்டான்லி அணையின் வரலாறு

Mettur Dam History in Tamil : மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. இன்னும் இரு தினங்களின் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Jul 27, 2024 - 11:30
Jul 27, 2024 - 12:19
 0
கடல் போல காட்சி அளிக்கும் மேட்டூர் அணை.. 71வது முறையாக 100 அடியை தொட்டது..  ஸ்டான்லி அணையின் வரலாறு
Mettur Dam History in Tamil

Mettur Dam History in Tamil : காவிரி ஆற்றில் 1 லட்சத்திற்கும் அதிகமான கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கரையோரப்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 71வது முறையாக 100 அடியை எட்டியுள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து விநாடிக்கு 1.25 லட்சம்  கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து சனிக்கிழமை காலையில் விநாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி ஆற்றில் 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

வெள்ளிக்கிழமையன்று காலை 94 அடியாக இருந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து சனிக்கிழமை காலையில் 100 அடியை எட்டியது. தண்ணீர் 16 கண் பாலத்தை தொட்டுக்கொண்டு கடல் போல காட்சியளிக்கிறது. இதனையடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

1934ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்றுதான் மேட்டூர் அணை(Mettur Dam) பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சேலத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் இருக்கும் மேட்டூர்(Mettur) என்கிற ஊர். இரு பக்கம் மலைக் குன்றுகள். நடுவே உள்ள பள்ளத்தில் கரை புரண்டு ஓடுகிறது காவிரி ஆறு. வெள்ள காலத்தில் பெருக்கெடுத்து ஓடி, நாடு முழுக்க இருக்கும் கழனிகளை நாசம் செய்தது. தடுத்து நிறுத்துவதற்கு வழி இல்லாததால், மழை இல்லாத காலத்தில் காவிரி ஆற்றுத் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். 

இதன் காரணமாக, காவிரி ஆற்றுக்குக் குறுக்கே ஒரு அணை கட்ட வேண்டும் என்கிற யோசனை 1801ஆம் ஆண்டே பிரிட்டிஷ் கிழக்கிந்திய சபையினருக்கு வந்தது. அதற்கான முயற்சிகளில் இறங்கியவுடன் மைசூர் சமஸ்தானம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அணையைக் கட்டும் முயற்சியைக் கைவிட்டது கிழந்திந்திய சபை. 1835ஆம் ஆண்டில், சர் ஆர்தர் காட்டன் என்கிற பொறியாளரை மீண்டும் மைசூருக்கு அனுப்பி மேட்டூரில் அணை கட்டுவதற்கான அனுமதியைப் பெற்று வர அனுப்பியது. அணை கட்ட மைசூர் சமஸ்தானம் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால், இரண்டாவது முறையாகவும் திட்டம் கைவிடப்பட்டது.

1923ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவான் பகதூர் சி.பி. ராமசாமி அய்யரிடம், தஞ்சை விவசாயிகள் ஒன்று திரண்டு ஒரு கோரிக்கையை வைத்தனர். மேட்டூர் அணை கட்ட நிச்சயம் அனுமதி பெற்றுத் தரவேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. கோரிக்கையை நிறைவேற்றித் தர சம்மதித்தார் சி.பி.ராமசாமி அய்யர். காரணம், இவரது முன்னோர்கள் தஞ்சைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதே. திவான் பகதூர் சி.பி. ராமசாமி, மைசூர் சம்ஸ்தானத்தினரை அணுகி, திவான் பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்துப் பேசினார். வழக்கம் போல மைசூர் சமஸ்தானத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தஞ்சை விவசாயிகள் வேறு ஒரு கோரிக்கை வைத்தனர். 

ஆண்டு தோறும் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தினால், பல நூறு கிலோ மீட்டர்களுக்கு பலத்த சேதம் ஏற்படுகிறது. இந்த சேதத்துக்கு நஷ்ட ஈடாக ஆண்டு 30 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் மூலமாக ஒரு கோரிக்கை மைசூர் சமஸ்தானத்துக்கு அனுப்பினர். ஒவ்வொரு ஆண்டும் 30 லட்ச ரூபாயைக் கொடுப்பதைவிட, மேட்டூரில் அணை கட்டிக் கொள்ள சம்மதிப்பதே புத்திசாலித்தனம் என்று சி.பி.ராமசாமி அய்யர் மைசூர் சமஸ்தானத்திடம் எடுத்துச் சொல்லி மேட்டூரில் அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி வாங்கிக் கொடுத்தார். 

அணை கட்ட அனுமதி வாங்கும் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போதே, அதற்கான ஆய்வுப்பணிகளை தொடர்ந்து செய்து வந்தது ஆங்கிலேயே அரசாங்கம். 1905 முதல் 1910-ஆம் ஆண்டு வரை ஆய்வுப் பணிகள் நடந்தன. ஆய்வுப் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு 1924-ஆம் ஆண்டு 31-ஆம் தேதி இந்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அதே ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அனுமதியும் வழங்கப்பட்டது. 1925-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி மேட்டூர் அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 

தலைமை மற்றும் வடிவமைப்பு பொறியாளர் எல்லிஸ், நிர்வாக பொறியாளர் வெங்கட்ராமைய்யர், முதன்மை தலைமை முல்லிங்க்ஸ் தலைமையில் 24 பொறியாளர்கள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஓய்வின்றி உழைத்து மேட்டூர் அணையைக் கட்டி முடித்தனர்.

1934ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி கடைசிக்கல் வைத்து அணை கட்டும் பணி முடிந்தது. அதற்கடுத்த மாதம், அதாவது ஆகஸ்ட் 21ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றுப் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட்டார் அப்போதைய சென்னை மாகாணத்தின் கவர்னராக இருந்த ஜான் பெடரிக் ஸ்டான்லி. அவரது நினைவாகவே, மேட்டூர் அணை ஸ்டான்லி அணை என்று அழைக்கப்படுகிறது. 

அந்த காலகட்டத்தில் மேட்டும் அணையைக் கட்டி முடிக்க ஆன செலவு 4.80 கோடி ரூபாய். மேட்டூர் அணையின் உயரம் 124 அடி. 120 அடி தண்ணீர் தேக்கி வைக்க அனுமதி உண்டு. அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர். இரண்டு சிறிய மலைகளுக்கு நடுவே உயரமான, நீளமான சுவரை எழுப்பி இந்த அணை கட்டப்பட்டிருக்கிறது.

மேட்டூர் அணையின் மொத்த நீர் கொள்ளளவு 120 அடியாகும். 2010 டிசம்பர் மாதம் 39வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை அதாவது 120 அடியை எட்டியது. கடந்த, 2011, 2012 ஆகிய இரு ஆண்டுகள், வறட்சியால் அணை முழுவதுமாக நிரம்பவில்லை. கடந்த 2022ஆம் ஆண்டு மேட்டூர் அணை நீர் மட்டம் தொடர்ந்து 308 நாட்களுக்கு மேல் 100 அடியாக இருந்தது. இதே போல கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2006ஆம் ஆண்டு அக்டோபர் வரை 400 நாட்களுக்கு மேல் 100 அடி நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போனதால் அணை நிரம்பவில்லை. ஒவ்வொரு ஆண்டும்  ஜூன் 12 ஆம் தேதி அன்று குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும். நடப்பாண்டு ஜூன் 12ஆம் தேதியன்று வெறும் 43 அடி மட்டுமே இருந்ததால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கடந்த 50 நாட்களில் மேட்டூர் அணை 100 அடியை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. 

மேட்டூர் அணை கட்டி, 90 ஆண்டுகளில் 100 அடியை எட்டுவது 71வது முறையாகும். விரைவில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என்பதால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  மேட்டூர் அணை நீர்மட்டம் விரைவில் நிரம்ப உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow