ஒகேனக்கல் காவிரியில் பொங்கி வரும் புது வெள்ளம்.. நிரம்பும் மேட்டூர் அணை.. டெல்டா விவசாயிகள் ஹேப்பி

Mettur Dam Water Level Today : கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Jul 27, 2024 - 07:00
Jul 27, 2024 - 10:35
 0
ஒகேனக்கல் காவிரியில் பொங்கி வரும் புது வெள்ளம்.. நிரம்பும் மேட்டூர் அணை.. டெல்டா விவசாயிகள் ஹேப்பி
cauvery river mettur dam water level

மேட்டூர் : காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல்(Hogenakkal) மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 12 ஆவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும், படகுகளை இயக்கவும் பரிசல் சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 91 அடியாக உயர்ந்துள்ளது.

கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. விடாது கொட்டி வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 

நிரம்பி வழியும் அணைகள்:

கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்த நிலையில்.  கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி ,  அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கபினி அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 

பொங்கி வரும் காவிரி:

கபினி,கிருஷ்ணராஜா சாகர்  இரண்டு அணைகளில்  இருந்தும் 1 லட்சத்து 30 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்த விடப்பட்டுள்ளது. பொங்கி வரும் புதுப்புனலாய் தமிழக எல்லையான பிலிகுண்டுவில் காவிரி ஆர்ப்பரித்து வந்து கொண்டுள்ளது.  ஒகேனக்கல்லில்  நேற்று மாலை 1 லட்சம் ஆயிரம் கன அடி  தண்ணீர் வந்தது.  படிப்படியாக நீர் மட்டம் உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 1 லட்சத்து  15 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம்:

காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிப்பால்ஸ் அருவிகள் அடையாளம் தெரியாத அளவிற்கு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. பாறைகள் தெரியாத அளவிற்கு காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் செய்யவும் விதிக்கப்பட்ட தடையானது 12வது நாள் தொடர்ந்து நீடிக்கிறது. 

மேட்டூர் அணை: 

மேட்டூர் அணைக்கு வரும்  நீரின் அளவு(Mettur Dam Water Level) தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  விநாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. இதனிடையே, அதிகரித்து காணப்படும் நீர்வரத்தினால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 94.23 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 55.69 டிஎம்சியில் இருந்து 57.62 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.

அணை நீர்மட்டம் 100 அடி: 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து இருக்கும் நிலையில், பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வள ஆணையம், தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அணை நீர்மட்டம் இன்றைய தினம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் டெல்டா பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு: 

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போதைய நீர் வரத்து தொடர்ந்தால், இன்று மாலைக்குள் நீர்மட்டம் 100 அடியை எட்டிவிடும். தொடர்ந்து, நீர்வரத்து அதிகரித்தால், டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்யும் என்று கூறியுள்ளனர்.

9 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்: 

இதனிடையே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர் வளத்துறை ஆணையத்தின் செயற்பொறியாளர் பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட 83,000 கன அடி நீர் நாளைக்குள் மேட்டூர் அணை வந்தடையும். எனவே, நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை ஆகிய 9 மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை: 

கர்நாடகா அணைகளில் இருந்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், சேலம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி, வருவாய்துறை சார்பில் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டூர் அணை நீர்தேக்க பகுதியான கோட்டையூர், செட்டிப்பட்டி, பண்ணவாடி, கோவிந்தபாடி உள்ளிட்ட பகுதிகளில் மீன் பிடிக்கவோ, பரிசல் இயக்கவோ, துணி துவைக்கவோ பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வருவாய் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு: 

ஒகேனக்கல் பகுதியில் உள்ள  நாடார் கொட்டாய், ஊட்டமலை,சத்திரம், மற்றும் நெருப்பூர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.மேலும் வருவாய்த் துறையினர் ஊரக வளர்ச்சித் துறை  தீயணைப்பு துறை போலீசார், ஊர்க்காவல் படையினர் ஆகியோர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை  கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள்  தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow