தேவநாதனுக்கு சொந்தமான தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சீல்.. நிதி மோசடி வழக்கில் போலீஸார் அதிரடி

நிதி நிறுவன மோசடி தொடர்பாக பாஜக பிரமுகர் தேவநாதனுக்கு சொந்தமான நிதி நிறுவனம் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.

Aug 18, 2024 - 15:22
Aug 18, 2024 - 15:32
 0
தேவநாதனுக்கு சொந்தமான தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சீல்.. நிதி மோசடி வழக்கில் போலீஸார் அதிரடி
தேவநாதனுக்கு சொந்தமான நிதி நிறுவனம் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சீல்

சென்னை, மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ‘மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்’ எனும் நிதி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிதி நிறுவனத்தின் தலைவராக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தனியார் தொலைக்காட்சி நிறுவனருமான தேவநாதன் யாதவ் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்த வண்ணம் இருந்தனர்.

இந்த மோசடி தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி அந்த நிறுவனத்திற்கு முன்பாக 50க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், திருச்சியில் தேவநாதன் யாதவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதன் தொடர்புடைய 11 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 4 லட்சம் பணம், இரண்டு கார்கள், ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சென்னை மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம், தி.நகரில் உள்ள தேவநாதனின் வீடு, குற்றத்திற்கு உடந்தையாக இருந்த நபர்களின் வீடுகள் என 12 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். சோதனையின் முடிவில் நிதி நிறுவனம் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்து சென்றனர்.

சமீபத்தில் முடிவடைந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024 தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow