சிறுமி கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்தார்.. கணவர் மீது சந்தேகம்.. மனைவி வாக்குமூலம்

15 வயது சிறுமி சித்ரவதை செய்து அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதான 6 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Nov 4, 2024 - 08:20
 0
சிறுமி கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்தார்.. கணவர் மீது சந்தேகம்.. மனைவி வாக்குமூலம்

சென்னை அமைந்தகரை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில் வீட்டு வேலை செய்து வந்த 15 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. விசாரணையில் இறந்த போனவர் 15 வயது சிறுமி என்பதும், அவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் என்பதும் தெரியவந்தது.

சிறுமி கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முகமது நிஷாத் என்பவரின் குழந்தை பராமரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் போலீசாரின் விசாரணையில் இறந்து போன சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

எனவே அந்த வீட்டில் வசித்த முகமது நிஷாத் மற்றும் அவரது மனைவி நிவேதா என்ற நாசியா, நண்பர்களான லோகேஷ் மற்றும் அவரது மனைவி ஜெயசக்தி, அவர்களது வீட்டு வேலைக்கார பெண்மணி மகேஸ்வரி, முகமது நிஷாத்தின் சகோதரி சீமா பேகம் ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் கடந்த 3 மாதங்களாக சிறுமியை அடிக்கடி சித்ரவதை செய்தும், துன்புறுத்தியும் வந்துள்ளனர்.

தீபாவளி தினத்தன்று காலை சிறுமியை முஹம்மது நிஷாத் அவரது மனைவி நிவேதா (எ) நாசியா மற்றும் இவர்களது நண்பரான லோகேஷ் அவரது மனைவி ஜெயசக்தி ஆகியோர் சேர்ந்து கொடூரமாக தாக்கி உள்ளனர். லோகேஷ் காலால் எட்டி உதைத்ததும், பின்னர் அயன்பாக்ஸால் சிறுமியின் மார்பகத்தில் சூடு வைத்ததும் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் நிலைகுலைந்த சிறுமி மயக்கம் அடைந்து மூர்ச்சையாகி உள்ளார். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் சிறுமியை பாத்ரூமுக்குள் இழுத்துச் சென்று போட்டதும், சில மணி நேரம் கழித்து சென்று பார்த்தபோது சிறுமி உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. இதனால் பயந்து போன கணவன் மனைவி சிறுமியை பாத்ரூமில் போட்டுவிட்டு ஊதுபத்தி ஏற்றி வைத்துவிட்டு தங்களது உறவினர்கள் வீட்டிற்கு சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

அதன் பேரில் மேற்கண்ட சந்தேக மரண வழக்கானது கொலை வழக்கு மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது. வீட்டின் உரிமையாளர் நிவேதா என்ற நாசியா, அவரது கணவர் முகமது நிஷாத், லோகேஷ், அவரது மனைவி ஜெயசக்தி, கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த மகேஸ்வரி, (வேலைக்கார பெண்மணி), மற்றும் முகமது நிஷாத்தின் சகோதரி அடையாரைச் சேர்ந்த சீமா பேகம் ஆகியோர் நேற்று சனிக்கிழமை (02.11.2024) அன்று கைது செய்யப்பட்டனர்.

சிறுமி கொலை குறித்து வீட்டின் உரிமையாளர் நாசியா, ‘கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்த சிறுமியின் மீது, தனது கணவரின் பார்வை திரும்பியதாக சந்தேகப்பட்டு கொடூரமாக சித்தரவதை செய்ததாக’ வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிறகு கைது செய்யப்பட்ட 6 பேரையும் அமைந்தகரை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திர். வருகிற 16ஆம் தேதி வரை 6 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow