குடும்பத்தினரை சந்தித்து பேசிய ஜாபர் சாதிக்.. வாக்குமூலத்தை பதிவு செய்த அமலாக்கத் துறை

Jaffar Sadiq Drug Smuggling Case : போதைப்பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் ஈடுபட்டது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.

Jul 18, 2024 - 19:52
Jul 19, 2024 - 10:03
 0
குடும்பத்தினரை சந்தித்து பேசிய ஜாபர் சாதிக்.. வாக்குமூலத்தை பதிவு செய்த அமலாக்கத் துறை
ஜாபர் சாதிக்கிடம் வாக்குமூலத்தை பெற்ற அமலாக்கத் துறை

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்த நிலையில், குடும்பத்தினரை ஒரு மணி நேரம் சந்தித்து பேசினார்.

Jaffar Sadiq Drug Smuggling Case: 2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் (Jaffer Sadiq) கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாபர் சாதிக்கை கைது செய்த டெல்லி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் ஜாபர் சாதிக். மேலும், அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை கடந்த 28ம் தேதி கைது செய்தனர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜாபர் சாதிக். இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கியது.

ஆனாலும் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாது. ஏனென்றால் சென்னை அமலாக்கத்துறை ஜாபர் சாதிக்கை கைது செய்து இருப்பதாலும், அந்த வழக்கில் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை என்பதாலும், அவரால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக சென்னை மற்றும் மும்பையில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இந்த வழக்கில் சர்வதேச போதை பொருள் கடத்தலில் பெரும் மூளையாக செயல்பட்டுள்ளதாகவும், இந்த கடத்தல் மூலமாக கிடைத்த சட்ட விரோத பணத்தால் பயனைடைந்த பிரதான பயனாளி என்பதற்கான சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது. இன்று மாலை ஜாபர் சாதிக்கை அவரது மனைவி ஹமீனா, தாயார் சம்சத் பேகம் மற்றும் வழக்கறிஞர் நேரில் சந்தித்து பேசினர்.

ஒரு மணி நேரம் சந்தித்து பேச சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் அனுமதி வழங்கியதால் ஒரு மணி நேரம் ஜாபர் சாதிக் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். இதற்கிடையில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு குறித்து ஜாபர்சாதிக்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்து வருகின்றனர். நாளையுடன் காவல் முடிகிறது. நாளை மதியம் அல்லது மாலை மீண்டும் அவரை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்த உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow