Samsung Protest: சென்னையில் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்... ஆக்ஷனில் இறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்
Samsung Employees Protest : சென்னையில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் உள்ள ஊழியர்கள், தொடர்ந்து 25 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Samsung Employees Protest : தென்கொரியவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சாம்சங் நிறுவனம், உலகளவில் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது. டிவி, செல்போன், ஏசி என ஏராளமான எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து வருகிறது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு காணப்படுகிறது. இந்நிலையில், சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சாலை ஒன்று சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் இயங்கி வருகிறது. அதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலை பார்த்து வரும் நிலையில், கடந்த 25 நாட்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாம்சங் நிறுவனம் தென்கொரியாவில் தொழிற் சங்கத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், காஞ்சிபுரத்தில் உள்ள நிறுவனத்தில் மட்டும் தொழிற் சங்கத்தை அங்கீகரிக்க மறுத்து வருகிறது. அதேபோல் ஊதிய உயர்வு குறித்துப் பேசவும் நிர்வாகம் முன்வரவில்லை. இதனை கண்டித்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்றைய போராட்டத்தில், CPM கட்சியின் கே. பாலகிருஷ்ணன், CPI கட்சியின் ரா. முத்தரசன் உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள் ஊழியர்களுக்கு ஆதரவாக பங்கேற்று கைதாகினர்.
இதனையடுத்து சாம்சங் ஊழியர்கள் போராட்டத்துக்கு, அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, தா.மோ. அன்பரசன், கணேசன் ஆகிய அமைச்சர்கள் இணைந்து தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து 3 அமைச்சர்களும், வரும் 7ம் தேதி தொழிலாளர் - நிறுவனத்தினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து ஒவ்வொரு 9 நொடிகளுக்கும் ஒரு குளிர்சாதனப் பெட்டி தயாராகி வருகிறது. கொரியாவில் மட்டும் ஊழியர்களுக்கு இணக்கமாக செயல்படும் சாம்சங் நிறுவனம், தமிழக ஊழியர்களை மட்டும் வஞ்சிப்பபதாக தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதவிர இன்னும் பல பிரச்சினைகள் இருப்பதாகவும் சாம்சங் ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?