Rain Update Today in Chennai : தமிழ்நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி உட்பட பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியிருந்தது. இந்நிலையில், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேனி, திண்டுக்கல் உள்பட 11 மாவட்டங்களில், கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், தமிழ்நாட்டில் வரும் 10-ம் தேதி வரை கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், லட்சதீவு அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல், தேனி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளதோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதேபோல், நாளை நாமக்கல், திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15-ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, வருகிற 9-ம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இதையடுத்து, நான்காவது வாரத்தில் மழை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை வடதமிழகத்தில் இயல்பைவிட அதிகமாகவும், தென்தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். 15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு மண்டலம் வாரியாக மழைநீர் வடிகால் பணிகளின் நிலை குறித்து துணை முதலமைச்சரிடம் விளக்கம் அளித்தனர். இதனிடையே சென்னையின் சில பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.