ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் ரெய்டு.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடரும் வேட்டை

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும்  வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Nov 19, 2024 - 21:06
 0
ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் ரெய்டு.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடரும் வேட்டை
ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை

சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வடசென்னை ரவுடியான நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு, சிடி மணி உட்பட மொத்தம் 28 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் 25 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்களை மாறி மாறி காவலில் எடுத்து, செம்பியம் தனிப்படைப் போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர். அதேபோல் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

இவ்வழக்கில் மூளையாக செயல்பட்ட ரவுடி சம்போ செந்தில், பாம் சரவணன், மற்றும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இவர்களைப் பிடிப்பதற்காக சென்னை தனிப்படை போலீசார் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக இருந்து வரும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செம்பியம் போலீசார், நேற்று [அக்டோபர் - 03] எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதை எடுத்து நவம்பர் 14ஆம் தேதி அன்று எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி ரகுபதி ராஜன் முன் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் 27 பேர் சிறையில் இருந்து அழைத்துவரப்பட்டு ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 5000 பக்கம் உடைய குற்றப்பத்திரிக்கையை அட்டைப் பெட்டியில் வைத்து அனைவருக்கும் நகலானது வழங்கப்பட்டது.

குற்றப்பத்திரிகையில், கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனையும், 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலையும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். 3வது குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன் மகனும், முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான அஸ்வத்தாமனை சேர்த்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி திருவேங்கடம் ஜூலை 14ஆம் தேதியும், ரவுடி சீசிங் ராஜா, கடந்த செப்டம்பர் 23ஆம் தேதியும், போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் துணை ஆணையர் பள்ளிக்கரணை தலைமையில் 100 மேற்பட்ட போலீசார் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தாம்பரம், சேலையூர்  உள்ளிட்ட 10 மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow