குட்கா கடத்தலில் பேரம் பேசிய போலீசார்.. விசாரணையில் திடுக் தகவல்கள்..
Gutka Smuggling in Erode : குட்கா உரிமையாளர் பேரம் பேசப்பட்ட செல்போன் உரையாடல் பதிவை, ஈரோடு காவல்துறையினருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
குட்கா கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் பேரம் பேசிய இரண்டு காவல்துறையினரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
Gutka Smuggling in Erode : ஈரோடு மாவட்டம் பவானி போக்குவரத்து காவல்நிலையத்தில் முதல்நிலை காவலர்களாக பிரபு மற்றும் சிவகுமார் ஆகியோர் பணியாற்றி வந்தனர். கடந்த 12ஆம் தேதி பவானி வழியாக குட்கா பொருட்கள் ஈரோட்டிற்கு கடத்தி செல்வதாக பிரபுவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரபு மற்றும் சிவகுமார் ஆகியோர் கூடுதுறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த கனரக வாகனத்தை நிறுத்தி நடத்திய சோதனையில், சுமார் 300 கிலோ குட்கா பொருட்களை, கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து ஈரோட்டிற்கு கடத்தி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, பறிமுதல் செய்த குட்காவை, பிரபு மற்றும் சிவக்குமாரும் யாருக்கும் தெரியாமல், நாமக்கல் மாவட்டம், வெப்படையில் உள்ள குடோன் ஒன்றில் பதுக்கி வைத்துள்ளனர்.
மேலும், ஓட்டுநர் தர்மபுரியை சேர்ந்த ராஜேந்திரன் மூலம் பெங்களூரில் உள்ள குட்கா பொருட்களின் உரிமையாளரிடம் பேரம் பேசியதாக தெரிகிறது. குட்கா பொருட்களை விடுவிக்க சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கேட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பணம் கொடுத்த பின்னர், சரக்கை வந்து எடுத்துச் செல்லுமாறு கூறி வாகனத்தையும் ஓட்டுநரையும் காவலர்கள் விடுவித்துள்ளனர்.
இதனையடுத்து, பேரம் பேசப்பட்ட செல்போன் உரையாடல் பதிவை, குட்கா உரிமையாளர் ஈரோடு காவல்துறையினருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, வெப்படையில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடத்தல்காரர்களிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், முதற்கட்டமாக இரு காவலர்களையும் ஆயுதப்படைக்கு கடந்த மாற்றி, எஸ்பி ஜவஹர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் குறித்து, பவானி காவல் துணை கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி தலைமையில் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். இருவரிடமும் விசாரணை நடத்தி வந்த சூழலில், குட்கா பொருட்களை கடத்தி வந்த ஓட்டுநர் ராஜேந்திரனை பவானி காவல்துறையினர் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய ஈச்சர் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், பவானி போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்த முதல் நிலை காவலர் பிரபு, இதற்கு முன்பு அந்தியூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்த போது, அங்கு சட்டவிரோத மது விற்பனை மற்றும் குட்கா பொருட்கள் பிடிக்கும் குற்ற தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது குட்கா விற்பனை செய்யும் பலரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பவானி அருகேயுள்ள காலிங்கராயன் பாளையம் பகுதியைச் சேர்ந்த குட்கா விற்பனையாளரான ரவி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று பெங்களூரில் இருந்து அந்தியூர் வழியாக குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக, போக்குவரத்து காவலர் பிரபுக்கு, ரவி தகவல் கொடுத்துள்ளார். பெங்களூரில் இருந்து கடத்தி கொண்டு வரும் குட்கா பொருட்கள் ஈரோட்டை சேர்ந்த சண்முகம் (ரவியின் உறவினர்) என்பவருக்கு கொண்டு செல்வதும், சண்முகம் நான்கு குடோன்களில் குட்கா பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து பணக்காரராக மாறியுள்ளதாக ரவி தெரிவித்துள்ளார். ரவி மற்றும் சண்முகம் இருவர் மீதும் ஏற்கனவே சித்தோடு காவல் நிலையங்களில் குட்கா பொருட்கள் கடத்தல் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
ஓட்டுநர் தர்மபுரி மாவட்டம், கெண்டயஹள்ளி ராஜேந்திரனை (36) பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், குட்கா பொருட்களை கடத்திச் சென்று பதுக்கி வைத்து பேரம் பேசிய பவானி போக்குவரத்து முதல் நிலைக் காவலர்கள் பிரபு மற்றும் சிவக்குமாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இவர்கள் இதுபோன்று வேறு ஏதேனும் பேரம் பேசி பணம் பெற்றுள்ளார்களா என விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குட்கா பொருட்களை குடோனில் இறக்கி வைத்து பேரம் பேச உதவியாக இருந்த ரவி அவரது நண்பர் ரஞ்சித் மற்றும் குட்கா பொருட்களை வாங்கவிருந்த சண்முகம் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த பவானி போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
What's Your Reaction?