ரபாடா, மஹாராஜ் அபாரம்.. சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்.. தொடரை கைப்பற்றியது தெ.ஆப்பிரிக்கா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.

Aug 18, 2024 - 14:53
Aug 18, 2024 - 14:58
 0
ரபாடா, மஹாராஜ் அபாரம்.. சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்.. தொடரை கைப்பற்றியது தெ.ஆப்பிரிக்கா

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி, டிராவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பிராவிடென்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. இதனையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 160 ரன்களுக்குள் சுருண்டது. டெய்லெண்டரான பீய்ட் எடுத்த 38 ரன்களே அதிகப்பட்சமாகும். அவருக்கு அடுத்தபடியாக, பெடிங்காம் 28 ரன்களும், ட்ரிஸ்டன் ஸ்ட்பஸ் 26 ரன்களும், வெர்ரேய்னே 21 ரன்களும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, அணிக்குள் நுழைந்து தனது இருப்பை மீண்டும் நிரூபித்துள்ளார் ஷமர் ஜோசப். அவருக்கு துணையாக ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், ஜேசல் ஹோல்டர் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து 54 ரன்கள் எடுத்தார். ஷமர் ஜோசப் 25 ரன்களும், கீஸி கர்டி 26 ரன்களும், குடகேஷ் மோடீ 11 ரன்களும் எடுத்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினர். அதிலும், மூன்று பேர் டக் அவுட் ஆகினார்.

இதனால், 16 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எய்டன் மார்க்ரம் 51 ரன்களும், டோனி டி ஷோர்சி 39 ரன்களும் எடுத்தனர். ஒரு கட்டத்தில் 120 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழ்ந்த தென் ஆப்பிரிக்கா அணி, 139 ரன்களுக்குள் அடுத்த 3 விக்கெட்டுகளை இழந்தது.

கேப்டன் டெம்பா பவுமா 4 ரன்களிலும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 ரன்களும் எடுக்க டேவிட் பெடிங்காம் ரன் ஏதும் இல்லாமலும் வெளியேறினர். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கெயில் வெர்ரேய்னே, வியன் முல்டர் இணை 6ஆவது விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்தது. வெர்ரேய்னே 59 ரன்களும், முல்டர் 34 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதனால், 246 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா அணி ஆல்-அவுட் ஆனது.

இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 267 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வழக்கம்போல், முக்கியமான கட்டத்தில் சொதப்பும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த முறையும் சொதப்பியது. ஒருவர் கூட நிலைத்து நின்ற அரைச்சதம் எடுக்கவில்லை. அதிகப்பட்சமாக குடகேஷ் மோடீ 45 ரன்கள் எடுத்தார். கவெம் ஹோட்ஜ் 29 ரன்களும், ஜோஷ்வா டி சில்வா 27 ரன்களும், ஜோமல் வாரிகன் 25 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில், காகிசோ ரபாடா மற்றும் கேசவ் மஹாராஜ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. ஆட்டநாயகனாக, வியன் முல்டரும், தொடர் நாயகனாக கேசவ் மஹாராஜாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow