பாராலிம்பிக் நிறைவு.. வரலாற்று சாதனை படைத்த இந்தியா.. மொத்தம் எத்தனை பதக்கங்கள்?
பாராலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியவர் இந்தியா வீராங்கனை அவானி லெகாரா. இவர் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். அடுத்ததாக 2வது தங்கத்தை இந்திய பேட்மிண்டன் வீரர் நிதேஷ் குமார் தட்டித் தூக்கினார்

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடந்து வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நிறைவடைந்துள்ளது. இசை நிகழ்ச்சி உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பாராலிம்பிக் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன.
இந்த தொடரில் இந்தியா சார்பில் 84 வீரர்கள், 12 விளையாட்டு பிரிவுகளில் கலந்து கொண்ட நிலையில், இதுவரை இல்லாத வகையில் நமது வீரர்கள் பதக்கங்களை அள்ளிக்குவித்துள்ளனர். அதாவது இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை கைப்பற்றி 18வது இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. பாராலிம்பிக்கில் இந்திய அணி இவ்வளவு பதக்கங்களை வென்றது இதுவே முதன்முறையாகும்.
பாராலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியவர் இந்தியா வீராங்கனை அவானி லெகாரா. இவர் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். அடுத்ததாக 2வது தங்கத்தை இந்திய பேட்மிண்டன் வீரர் நிதேஷ் குமார் தட்டித் தூக்கினார். 3வது தங்கத்தை
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சுமித் அன்டிலும், 4வது தங்கப் பதக்கத்தை வில்வித்தை போட்டியில் ஹர்விந்தர் சிங்கும் தட்டித் தூக்கினார்கள்.
அடுத்ததாக 5வது தங்கப் பதக்கத்தை ஆண்களுக்கான 'கிளப் த்ரோ' போட்டியில் தரம்பிர் வென்று சாதனை படைத்தார். 6வது தங்கத்தை இந்திய வீரர் பிரவீன் குமார் உயரம் தாண்டுதல் போட்டியில் வென்று வரலாற்று சாதனை படைத்தார். 7வது மற்றும் கடைசி தங்கப் பதக்கத்தை இந்திய விரர் நவ்தீப் சிங் வென்றார். ஆண்கள் ஈட்டி எறிதல் எஃப் 41 இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய நவ்தீப் சிங் முதலில் வெள்ளிதான் வென்று இருந்தார். ஆனால் இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற ஈரானின் சடாகே சாயா பீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், நவ்தீப் சிங்குக்கு தங்கம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாராலிம்பிக் தொடரில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீனா 94 தங்கம், 76 வெள்ளி, 50 வெண்கலம் என மொத்தம் 220 பதக்கங்களை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளது. பிரிட்டன் 49 தங்கம், 44 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 124 பதக்கங்களை கைப்பற்றி இரண்டாம் இடத்தில் உள்ளது. அமெரிக்கா 36 தங்கம், 42 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 105 பதக்கங்களை கைப்பற்றி 3ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






