சிஎஸ்கே வீரரை புறக்கணிக்கும் பிசிசிஐ.. தமிழக முன்னாள் வீரர்கள் ஆவேசம்.. சரமாரி கேள்வி!

''ருத்ராஜ் கெய்க்வாட்டை நீக்கியது மிகப்பெரும் தவறு. இதை ஏற்றுக் கொள்ள முடியாதது. இதேபோல் அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.''

Jul 21, 2024 - 12:06
Jul 22, 2024 - 10:34
 0
சிஎஸ்கே வீரரை புறக்கணிக்கும் பிசிசிஐ.. தமிழக முன்னாள் வீரர்கள் ஆவேசம்.. சரமாரி கேள்வி!
ruturaj gaikwad and subramaniam badrinath

சென்னை: இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. 

அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பொறுப்பில் இருந்து கழற்றி விடப்பட்டு டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் ஒருநாள் போட்டி தொடர், டி20 தொடர் என இரண்டிலும் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இளம் வீரர் ரியான் பராக் டி20 தொடரில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். ஒருநாள் தொடரிலும் அறிமுக வீரராக அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சஞ்சு சாம்சன், கலீல் அகமது மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர். அதே வேளையில் இளம் வீரர் ரிங்கு சிங்குக்கு ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இதேபோல் ஜிம்பாப்வே டி20 தொடரில் 46 பந்தில் சதம் அடித்த அபிஷேக் சர்மாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. மிக முக்கியமாக, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிறப்பாக விளையாடி வரும் சிஎஸ்கே வீரரான ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

இது முன்னாள் வீரர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு வழங்காததை கண்டித்து அவர்கள் பிசிசிஐக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் தமிழ்நாட்டை சேர்ந்த சுப்பிரமணியன் பத்ரிநாத் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ''இந்தியாவுக்காக உள்ளூர் தொடரிலும், வெளிநாட்டு தொடர்களிலும் சிறப்பாக விளையாடி வரும் ருத்ராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படாதது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

நன்றாக விளையாடி வரும் அவரை எந்த ஒரு காரணமும் சொல்லி நீக்க முடியாது. ருத்ராஜ் கெய்க்வாட்டை நீக்கியது மிகப்பெரும் தவறு. இதை ஏற்றுக் கொள்ள முடியாதது. இதேபோல் அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. 

ருத்ராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் ஆகியோர் அணியில் இடம்பிடிக்க பாலிவுட் நடிகைகளுடன் தொடர்பில் இருந்து கிசுகிசு வைத்துக் கொள்ள வேண்டுமா? இல்லை உடலில் பச்சை குத்திக் கொள்ள வேண்டுமா? இல்லை தனது புகழ்பாடும் மேனேஜரை வைத்துக் கொள்ள வேண்டுமா? எனக்கு புரியவில்லை'' என்று பத்ரிநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல் இந்திய முன்னாள் கேப்டன் தமிழ்நாட்டை சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ''ருத்ராஜ் கெய்க்வாட் தொடர்ந்து தனது திறமையை நிரூபித்து வருகிறார். அவர் டி20 அணியில் ஆட்டோமேட்டிக்காக இடம் பெற்று இருக்க வேண்டும். கெய்க்வாட் நிறைய ரன்கள் அடித்துள்ளார். அவரது திறமையை தேர்வாளர்கள் கவனித்திருக்க வேண்டும். நீண்ட காலம் சிறப்பாக விளையாடாத சுப்மன் கில்லை துணை கேப்டனாக நியமித்தது ஏன்? சுப்மன் கில் போன்று நல்ல ராசி, அதிர்ஷ்டம் எந்த வீரருக்கும் கிடைக்காது'' என்று ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow