வங்கதேச டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் வாய்ப்பு? முழு விவரம்!

வங்கதேச அணி பாகிஸ்தான் மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதனால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. இதை கருத்தில் கொண்டே இந்திய அணியில் மூத்த வீரர்கள் அனைவரும் இந்த தொடரில் விளையாட உள்ளனர்.

Sep 8, 2024 - 22:01
Sep 9, 2024 - 10:55
 0
வங்கதேச டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் வாய்ப்பு? முழு விவரம்!
Indian Team Squad

டெல்லி: வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. 2வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து முதல் டி20 போட்டி அக்டோபர் 7ம் தேதியும், 2வது டி20 போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 3வது டி20 போட்டி அக்டோபர் 13ம் தேதியும் நடைபெற உள்ளன.  இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

உலகின் நம்பர் 1 பவுலர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் என ஸ்பின்னர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். பிசிசிஐ அறிவித்த 16 பேர் கொண்ட அணி வீரர்கள் பின்வருமாறு:- 

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யஷ் தயாள்.

கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கவுதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் படுதோல்வி அடைந்தது. ஆனால் வங்கதேச தொடரில் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

வங்கதேச அணி பாகிஸ்தான் மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதனால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. இதை கருத்தில் கொண்டே இந்திய அணியில் மூத்த வீரர்கள் அனைவரும் இந்த தொடரில் விளையாட உள்ளனர். இந்திய அணி கடைசியாக, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று இருந்தது.

இதற்கிடையே வங்கதேசத்தில் இந்து சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாலும், இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் நடந்து வருவதை கண்டித்தும் வங்கதேச அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடக்கூடாது; புறக்கணிக்க வேண்டும் என்று இந்திய நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow