ஈஷா பாரம்பரிய நெல், உணவு திருவிழா - ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு
Traditional Rice and Food Festival in Isha Mann Kappom : ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேலூரில் நடைபெற்ற பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவு திருவிழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.
Traditional Rice and Food Festival in Isha Mann Kappom : ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "பாரத பாரம்பரிய நெல் & உணவுத் திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி வேலூரில் நேற்று (ஜூலை 28) ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது. வேலூர், ஸ்ரீபுரம் பொற்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயணி மஹாலில் நடைப்பெற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஈஷா மண் காப்போம் இயக்கம் கடந்த 15 வருடங்களாக நம் மண்ணின் வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து வருகிறது. இயற்கை விவசாயத்தை மென்மேலும் விரிவுப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு பயிருக்கும் ஏற்ற வகையில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இது ஆடி பட்டம் காலம் என்பதால் நெல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த பாரம்பரிய நெல் திருவிழா நடத்தப்படுகிறது.
இத்திருவிழாவின் நோக்கம் குறித்து மண் காப்போம் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில் "இன்றைய காலத்தில், வீட்டுக்கொரு நீரிழிவு நோயாளியும், வீதிக்கு ஒரு புற்றுநோயாளியும் இருக்கின்றனர். தற்போது மக்களுக்கு ஆரோக்கியம் மீதான தேடல் அதிகரித்துள்ளது. இயற்கை விவசாயம் தொடர்பாக நம்மாழ்வார் அய்யா மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோர் பல முன்னெடுப்புகளை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுப்பதற்காக பல அமைப்புகள் பல நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் ஈஷாவின் மண் காப்போம் அமைப்பும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதற்காக இப்படி ஒரு நிகழ்வை ஒருங்கிணைத்து உள்ளது" எனப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து, நெல் மதிப்புக் கூட்டல் குறித்து தான்யாஸ் நிறுவனத்தின் நிறுவனர் திரு. தினேஷ் பேசுகையில் "ரூ.10 ஆயிரம் முதலீட்டுடன் தொடங்கிய இந்த நிறுவனம் இன்று மாதத்திற்கு 10 லட்சம் வரை மொத்த விற்பனை செய்கிறது. விவசாய பொருட்களை மதிப்பு கூட்டி விற்பதன் மூலம் நல்ல வருவாய் ஈட்ட முடியும். நாங்கள் பெற்ற அனுபவத்தை, அதாவது ஒரு விவசாய பொருளை எப்படி உற்பத்தி செய்து, மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துவது என்பதை மண் காப்போம் இயக்கத்தோடு இணைந்து பயிற்சியாக வழங்கி வருகிறோம்.
இன்று பாரம்பரிய அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளது. உதாரணமாக சமீபத்தில் 1 டன் அளவிலான பூங்கார் அரிசி ரகத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தோம். காரணம் அதன் மருத்துவ குணநலன்களை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். எனவே நல்ல தரமான பொருட்களை மக்களுக்கு கொடுத்தால், மக்கள் நமக்கு நல்ல வரவேற்பை கொடுப்பார்கள்" என்று பேசினார்.
அவரைத் தொடர்ந்து 60 ஏக்கரில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து அசத்தலான வருமானம் ஈட்டி வரும் முன்னோடி நெல் விவசாயி திரு. வீர ராகவன் சிறப்புரை வழங்கினார். மேலும் விவசாயத்தில் கால்நடைகளின் முக்கியத்துவம் குறித்து மரபு வழி கால்நடை மருத்துவர் டாக்டர். திரு. புண்ணியமூர்த்தி, "பூச்சிகளால் அதிகரிக்கும் நெல் மகசூல்" என்ற தலைப்பில் பூச்சியியல் வல்லுநர் திரு. பூச்சி செல்வம், நெல் வயலில் மீன் வளர்த்து தனித்துவமான முறையில் விவசாயம் செய்து வரும் முன்னோடி விவசாயி திரு. பொன்னையா உள்ளிட்ட முன்னோடி விவசாயிகளும், வேளாண் வல்லுநர்களும் இந்நிகழ்வில் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை வழங்கினர்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக இயற்கை விவசாயத்தில் சிறப்பாக செயல்படும் பத்து விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, "மண் காக்கும் விவசாயிகளுக்கு மண் காப்போம் விருதுகள்" வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக பொதுமக்களையும், விவசாயிகளையும் இணைக்கும் வகையிலான விவசாயிகளின் நேரடி சந்தை நடைப்பெற்றது. இந்த சந்தையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெற்றன. இதில் பாரம்பரிய அரிசி வகைகள், நாட்டு காய்கறிகள் மற்றும் அதன் விதைகள், நம் மரபு திண்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டன.
அது மட்டுமின்றி பாரம்பரிய நெல்லை பரவலாக்கம் செய்ய உதவும் வகையில் விவசாயிகளுக்கு விதைநெல் இலவசமாக வழங்கப்பட்டது. அத்துடன் நெல் விவசாயிகளுக்கு பயன்படும் எளிய கருவிகளின் கண்காட்சி மற்றும் விற்பனை, நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சி மற்றும் 200-க்கும் மேற்பட்ட மரபு காய்கறிகளினுடைய கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைப்பெற்றது.
ஈஷா மண் காப்போம் இயக்கம் மூலம் இதுவரையில் 25,000 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 8,000 விவசாயிகளுக்கு மேல் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?