உயிரை மாய்த்துக்கொள்ளும் மருத்துவ மாணவர்கள்.. தேசிய மருத்துவ ஆணைய சர்வே அதிர்ச்சித் தகவல்

ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மருத்துவ மாணவர்கள் மன அழுத்தப்பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Sep 4, 2024 - 11:59
 0
உயிரை மாய்த்துக்கொள்ளும் மருத்துவ மாணவர்கள்.. தேசிய மருத்துவ ஆணைய சர்வே அதிர்ச்சித் தகவல்
Dr suicide survey

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் எம்.டி பொதுமருத்துவம் படித்து வரும் அரவிந்தன்(29) என்ற மாணவர் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மருத்துவ மாணவரின் மரணம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்பது பலரது கனவு. மருத்துவம் படித்து சேவை செய்ய வேண்டும் என்பதற்காக நீட் உள்ளிட்ட கடினமான தேர்வுகளை எழுதி எம்பிபிஎஸ் படித்து முடித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களும் கூட தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். 

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பணிச்சுமை, பாலியல் தொல்லைகள், ராகிங் உள்படப் பல்வேறு பிரச்னைகளை “மருத்துவ மாணவர்களும்,பயிற்சி மருத்துவர்களும் எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் தற்கொலை முடிவை நோக்கித் தள்ளப்படுவதாக மருத்துவ சங்கங்கள் தொடர்ந்து கூறி வந்தன. இதற்கு வலு சேர்ப்பது போல தேசிய மருத்துவ ஆணையத்தின் சமீபத்திய சர்வே ஒன்று வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாவே மருத்துவ மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து  இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ மாணவர்களிடையே ஆன்லைன் வாயிலாக தேசிய மருத்துவ ஆணையம் சர்வே எடுத்தது. இதில் கடந்த ஓராண்டில் 16.2 சதவீதம் பேர் அதாவது சுமார் ஆறில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகக் கூறியுள்ளனர். 25 சதவிகித இளங்கலை மாணவர்களும் 15 சதவிகித முதுகலை மாணவர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்,சென்னை மருத்துவக் கல்லூரியில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சைத் துறையில் படித்து வந்த மருதுபாண்டியன் என்ற 30 வயதான மருத்துவர், தனது அறையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். மருதுபாண்டியன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கு மாதங்களுக்கு முன்புதான்  திருமணம் நடந்திருந்தது.

இறப்பதற்கு முன்னதாகத் தொடர்ந்து 18 மணிநேரம் அவர் மருத்துவப் பணி பார்த்ததாகக் கூறப்பட்டது. 'கடும் பணிச்சுமையின் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இறந்திருக்கலாம்' என மருத்துவ சங்கங்கள் குற்றம் சுமத்தின. இன்றைய தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் எம்.டி பொதுமருத்துவம் படித்து வரும் அரவிந்தன்(29) என்ற மாணவர் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கன்னியாகுமரியில் முதுகலை படித்து வந்த 27 வயதான மருத்துவ மாணவி ஒருவர், தனது அறையில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு காரணமாக, தனது பேராசிரியர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் மேலும் இரண்டு மருத்துவர்கள் மனதளவில் தன்னைக் காயப்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. 

இதனிடையே  தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் மூலம் சர்வே எடுத்து வெளியிட்டது. அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இளங்கலை மருத்துவ மாணவர்கள் 25,590 பேர் மற்றும் முதுகலை மாணவர்கள் 5,337 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஆசிரியர்கள், நிர்வாகத்தில் உள்ளவர்கள், வார்டன் என 7,035 பேர் சர்வேயில் பங்கெடுத்துள்ளனர்.

சுற்றுச்சூழல், படிக்கும் இடம், நிதிச் சுமை, ராகிங், தனிமை, வழிகாட்டுநரின் செயல்பாடு, கல்லூரி மற்றும் நிர்வாகரீதியிலான பிரச்னைகள், விடுதி, பணிச்சூழலில் ஏற்படும் அழுத்தம், குடும்ப அழுத்தம், துன்புறுத்தல்கள் எனப் பல்வேறு வகைகளில் கேள்விகளை முன்வைத்துள்ளனர். இதில், கடந்த 12 மாதங்களில் 16.2 சதவிகிதம் பேர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகக் கூறியுள்ளனர். 25 சதவிகித இளங்கலை மாணவர்களும் 15 சதவிகித முதுகலை மாணவர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இதுதொடர்பாக, மருத்துவக் கல்லூரிகளில் மனநல சேவைகளை அணுக முடியாத நிலை உள்ளதாக இளங்கலை மாணவர்களில் 19 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். இந்த சேவைகள், தரமற்றதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் மத்தியில் மனநல உதவியை நாடுவதில் தயக்கம் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆன்லைன் சர்வேயில் பதிலளித்த முதுகலை மாணவர்களில் 41 சதவிகிதம் பேர், மனநல உதவியை நாடுவதில் தயக்கம் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர். அங்குள்ள புறச்சூழல்களால் தங்களின் தனிப்பட்ட விவரங்கள் வெளியாகலாம் என்ற அச்சத்தில் உதவியை நாடுவதைத் தவிர்த்ததாகக் கூறியுள்ளனர்.வாரத்துக்கு 74 மணிநேரத்துக்கு மேல் உறைவிடப் பயிற்சி மருத்துவர்கள் வேலை பார்க்கக்கூடாது என்ற நிலையில், முதுகலை மாணவர்களுக்கான விடுதி வசதியில் குறைபாடு இருப்பதையும், தனியாகத் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருப்பதையும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

முதுகலை மாணவர்கள் 4.4 சதவிகிதம் பேர் கடந்த 12 மாதங்களில் தற்கொலைக்கு முயன்றனர். இதைச் சரி செய்வதற்கு, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 24 மணிநேர மனநல ஆலோசனைகளை வழங்கும் மையங்களைக் கொண்டு வரவேண்டும் எனவும் வாரத்துக்கு 74 மணிநேரத்துக்கு மேல் உறைவிடப் பயிற்சி மருத்துவர்கள் வேலை பார்க்கக்கூடாது எனவும் தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்துள்ளது.ஆரோக்கியமான சமூகம் உருவாவது மூத்த மருத்துவர்களின் கைகளில்தான் உள்ளது. இதைத்தான் தேசிய மருத்துவ ஆணைய சர்வேயும் வெளிப்படுத்துகிறது.

உயிரை காப்பாற்றும் கடவுளுக்கு நிகரான மருத்துவர்களே மன அழுத்தப்பிரச்சினையால் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். 
தற்கொலை எதற்கும் தீர்வாகாது. மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக மனநல மருத்துவரின் உதவியைப் பெறுவது அவசியம். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -2464000 (24 மணிநேர சேவை)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணிநேர சேவை).

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow