Vetrimaaran: தமிழ் சினிமாவின் தனித்துவம்... திரைமொழியின் அசுரன்... வெற்றிமாறனின் வெற்றிப் பயணம்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இதுவரை 7 படங்கள் இயக்கியுள்ள வெற்றிமாறன், 4 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளார். திரை மொழியின் அசுரனான வெற்றிமாறனின் வெற்றிப் பயணம் குறித்து இப்போது பார்க்கலாம்.

Sep 4, 2024 - 11:51
 0
Vetrimaaran: தமிழ் சினிமாவின் தனித்துவம்... திரைமொழியின் அசுரன்... வெற்றிமாறனின் வெற்றிப் பயணம்!
வெற்றிமாறன் பிறந்தநாள்

சென்னை: 2007ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணிபுரிந்த வெற்றிமாறன், அவரைப் போலவே தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநராக வலம் வருவார் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கமாட்டார்கள். ஆம்! முதல் படத்திலேயே ‘இயக்குநர் வெற்றிமாறன்’ என்ற தனித்த அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதித்தார். சொல்லப்போனால் செல்வராகவனுக்குப் பிறகு தனுஷை பட்டை தீட்டியதும் வெற்றிமாறன் தான். பல தடைகளையும் போராட்டங்களையும் கடந்து வெளியான பொல்லாதவன், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து வெளியான ஆடுகளம் திரைப்படம், வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணிக்கு விருதுகளை வாரி குவித்தது. சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை என இரண்டு தேசிய விருதுகளை வென்றது ஆடுகளம். பொல்லாதவன் மூலம் கோலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த வெற்றிமாறன், ஆடுகளம் ரிலீஸுக்குப் பின்னர் இந்திய சினிமாவில் பெரும் அதிர்வை கொடுத்தார். தனது பங்கள் கமர்சியல் தன்மையுடன் ரசிகர்களை என்டர்டெயின் செய்வதாக இருந்தாலும், அதில் தனக்கான தனித்துவம் இருக்க வேண்டும் என்பதில் வெற்றிமாறன் உறுதியாக செயல்படுவார். அதற்கு உதாரணமாக ஆடுகளம் படத்தை குறிப்பிடலாம். 

கருப்பு, பேட்டைக்காரன், ரத்னசாமி, துரை, ஐயூப் என ஆடுகளம் படத்தின் கேரக்டர்களும், திரையில் அவர்களை கொண்டுவந்த விதத்திலும் வெற்றிமாறன் அடித்தது எல்லாமே கிளாஸிக் சிக்சர்ஸ்கள் எனலாம். அடுத்து வெற்றிமாறன் இயக்கிய விசாரணை திரைப்படம் அதிகார வர்க்கத்தின் சட்டையப் பிடித்து உலுக்கியது. லாக் அப் என்ற நாவலை பின்னணியாக வைத்து விசாரணை படத்தை இயக்கியிருந்தார் வெற்றிமாறன். ஒரு படைப்பு இலக்கியத்தை எப்படி சினிமாவாக உயிர்ப்பிக்க முடியும் என்பதற்கு விசாரணை படத்தை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. போலி என்கவுன்டர் பின்னணியில் உள்ள அதிகார போக்குகளையும் அடையாள அரசியலையும் தோலுரித்துக் காட்டியது விசாரணை. இந்தப் படம் தேசிய விருது வென்றதோடு, சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

வெற்றிமாறனின் சினிமா பயணத்தில் இன்னொரு மைல் கல்லாக அமைந்தது வடசென்னை திரைப்படம். வடசென்னை என்றதுமே அன்பு, ராஜன், சந்திரா, குணா, பத்மா, செந்தில், வேலு ஆகியோர் தான் ரசிகர்களின் நினைவில் வருவார்கள். ஒரு படத்தில் நடித்த நடிகர்களை, அவர்களது கேரக்டர்களின் பெயர்களை வைத்து ரசிகர்கள் கொண்டாட முடியும் என்றால், அது வடசென்னையாக தான் இருக்க முடியும். இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் விரட்டி விரட்டி கேள்வி கேட்கும் அளவிற்கு வெற்றிமாறன் செய்த தரமான சம்பவங்களில் ஒன்று வடசென்னை.

’அசுரன்’, வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான இன்னொரு கல்ட் கிளாஸிக் சினிமா. தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, கென் கருணாஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இத்திரைப்படமும் வெற்றிமாறனுக்கு தேசிய விருது வென்று கொடுத்தது. சாதிய அதிகாரத்துக்கு எதிரான ஒரே ஆயுதம் கல்வி தான் என்பதை வன்முறை களத்தில் நின்று பேசியிருந்தார் வெற்றிமாறன். தனுஷ் என்ற நடிகனின் இன்னொரு பரிணாமத்தை அசுரத்தனமாக திரையில் காட்டினார் வெற்றி. அசுரனை தொடர்ந்து வெளியான விடுதலை முதல் பாகமும் தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்பாக கொண்டாடப்படுகிறது. அதுவரை காமெடியனாக மட்டும் வலம் வந்த சூரியை, கதையின் நாயகனாக மாற்றியதோடு, அவரது திரைப் பயணத்தையே அடுத்தக் கட்டத்துக்கு கொண்டுசென்றார். 

இதோ இந்தாண்டு இறுதியில் வெளியாகவிருக்கும் விடுதலை இரண்டாம் பாகம், சினிமா ரசிகர்களுக்கு வெற்றிமாறனின் விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது படங்களில் வெற்றிமாறன் பேசும் அரசியலும் அது ஏற்படுத்தும் விவாதங்களும் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத பெரும் மாற்றம் என்பதே சத்தியமான உண்மை. இன்னும் இதுபோல பல படைப்புகளை வெற்றிமாறன் கொடுக்க வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பம். அது நிறைவேற வேண்டும் என வெற்றிமாறனின் பிறந்தநாளில் வாழ்த்துவோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow