ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம்; 'ஜெய்பீம்' முழக்கத்துடன் பிரியாவிடை கொடுத்த மக்கள்!
வழிநெடுக கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தினார்கள். 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள் சூழ ஆம்ஸ்ட்ராங்க் உடல் எடுத்து செல்லப்பட்டது.
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் இரவு அயனாவரத்தில் உள்ள தனது வீட்டின் அருகே நின்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி செய்வதுபோல் வந்த கும்பல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளது.
ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் கைது செய்யப்பட்டது இந்தியா முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்து வரும் போலீசார், இதுவரை 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு அவரது உடல் அயனாவாரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி பந்தர் கார்டன் பள்ளியில் வைக்கப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல் அமைச்சருமான மாயாவதி, அமைச்சர் சேகர்பாபு, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றி மாறன், மாரி செல்வராஜ் என திரையுலக பிரபலங்களும் நேரில் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார்கள். இதன்பிறகு ஆம்ஸ்ட்ராங்கின் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதனால் அவரது உடல் அலங்கரிப்பட்ட வண்டியில் வைக்கப்பட்டு பெரம்பூரில் இருந்து பொத்தூர் கிராமம் நோக்கி புறப்பட்டது. வழிநெடுக கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அவரது உடலுக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தினார்கள். 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள் சூழ ஆம்ஸ்ட்ராங்க் உடல் எடுத்து செல்லப்பட்டது.
சுமார் 4.30 மணியளவில் பெரம்பூரில் இருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலம் சுமார் 7 மணி நேரத்துக்கு பிறகு பொத்தூர் கிராமம் சென்றடைந்தது. அதன் பின்னர் புத்த மத மந்திரங்களை வாசித்து புத்த மத வழக்கப்படி இறுதிச் சடங்கு நடந்தது.
ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டு இருந்த சந்தனப்பெட்டியில் சமத்துவ தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மற்றும் ஜெய்பீம் என்று எழுதப்பட்டு இருந்தது. ஆம்ஸ்ட்ராங் உடலில் பகுஜன் சமாஜ் கட்சியின் கொடி போர்த்தப்ட்டு இருந்தது.
தொடர்ந்து வீரவணக்கம்...வீரவணக்கம்... ஜெய்பீம்... என்ற முழக்கத்துடன் ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, குடும்பத்தினர் உள்பட அங்கு இருந்தவர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர்மல்க ஆம்ஸ்ட்ராங்க்கு பிரியாவிடை கொடுத்தனர். இறுதிச்சடங்கில் திருமாவளவன், செல்வப்பெருந்தகை, பூவை ஜெகன் மூர்த்தி, இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
What's Your Reaction?