Ameer: மகா விஷ்ணு பஞ்சாயத்து... CM சார் நோட் திஸ் பாயிண்ட்... கருத்து சொன்ன இயக்குநர் அமீர்!

சென்னை அசோக்நகர் அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு பேசியது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.

Sep 9, 2024 - 10:46
Sep 9, 2024 - 10:56
 0
Ameer: மகா விஷ்ணு பஞ்சாயத்து... CM சார் நோட் திஸ் பாயிண்ட்... கருத்து சொன்ன இயக்குநர் அமீர்!
மகா விஷ்ணு சர்ச்சை - அமீர் கருத்து

சென்னை: கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் பெயர் மகா விஷ்ணு. அசோக்நகரில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள் முன் அவர் உரையாற்றிய வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது மகா விஷ்ணுவின் கருத்து தவறு என அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழ் ஆசிரியர் சங்கருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து இயக்குநர் அமீரும் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், பிற்போக்குத்தனமான விஷக் கருத்துகளைப் பரப்பிய மஹாவிஷ்ணுவின் செயலைக் கண்டித்ததோடு, உரிய நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பாராட்டுத் தெரிவித்து நன்றி கூறியுள்ளார். 

மேலும், சக மனிதனை பிறப்பின் அடிப்படையில் தாழ்த்திப் பார்க்கின்ற சனாதன கருத்திற்கு எதிராக தமிழினம் விழித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இப்போது ஆன்மீகம் என்கிற போர்வையில் “முற்பிறவி பாவங்கள்” என்ற சொல்லின் மூலம், வர்க்க ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மீண்டும் ஒரு கும்பல் அடிமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இதனை உணர்ந்து தமிழக அரசு விழிப்போடு செயல்பட வேண்டிய தருணம் இது.! என்பதையே அசோக் நகர் அரசினர் மகளிர் பள்ளியின் நிகழ்வு நம் எல்லோருக்கும் உணர்த்துகிறது என குறிப்பிட்டுள்ளார். 

அதேபோல், தங்கள் கண் முன்னே நடைபெற்ற பிற்போக்குத்தனமான, மூட நம்பிக்கையான பேச்சுக்களை தடுக்காமல், கண்டும் காணாமல் ஆசிரியப் பெருந்தகைகள் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு மத்தியில் தனது ஞானக்கண் கொண்டு அநீதியை தட்டிக் கேட்டார் தமிழாசிரியர் சங்கர். அவருக்கு அமைச்சர் உள்ளிட்டோர் பாராட்டுக்களை வழங்கியதோடு நின்றுவிடாமல், அதே பள்ளியில் அவரைத் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

சமூகத்தை வழி நடத்தக்கூடிய அறிவார்ந்த நாளைய தலைமுறையை உருவாக்கும் பட்டறையாக கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டியது அரசின் கடமை. அதுமட்டுமல்லாது சமூகப் பொறுப்புள்ள அனைவரின் கடமை என்பது மறந்து போனது. சமீப காலமாக தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்களில், INSTAGRAM, REELS போன்ற சமூக வலைத்தளங்களிலும் YOUTUBE ஊடகத்திலும் பிரபலமானவர்களையும் அழைத்து மாணவர்களிடையே உரையாடச் செய்வது அதிகரித்து வருகிறது. 

எந்த விதமான கல்வித் தகுதியோ, அறிவில் தேர்ச்சியோ, ஞான முதிர்ச்சியோ, முற்போக்குச் சிந்தனையோ இல்லாதவர்களை மாணவர்களின் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்துகின்றனர். மேலும், அவர்களை நாயகர்களாக சித்தரிப்பதும் மாணவர்களுக்கு அவர்களை அறிவுரை வழங்கச் சொல்வதும் மிகவும் வேதனைக்குரிய விசயமாகும் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல, பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்க அல்லது சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள திரைக்கலைஞர்கள் பங்குபெறுவது ஏற்புடையது தான். இருந்தாலும், வணிக நோக்கத்திற்காக தயாரிக்கப்படும் பிரபலமானவர்களின் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களையும், திரைப்பட அறிமுக விழாக்களையும் கல்வி நிறுவன வளாகங்களில் நடத்துவது மாணவர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடியதே.! 

மேலும் படிக்க - பிரபல தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்... ரசிகர்கள் வேதனை!

திரை அரங்கங்கள் கல்விக்கூடமாக மாற வேண்டுமே, தவிர கல்விக்கூடங்கள் திரை அரங்குகளாக மாறிவிடக் கூடாது என்பதில் மக்களும், அரசும் கவனமாக இருக்க வேண்டும். எனவே, மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா, அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் திரைக்கலைஞர்கள், சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்று கருத்துரை வழங்க ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின்னு கோரிக்கை வைத்துள்ளார் இயக்குநர் அமீர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow