DilliBabu: பிரபல தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்... கோலிவுட்டுக்கு பெரும் இழப்பு... ரசிகர்கள் வேதனை
தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள தயாரிப்பாளர் டில்லி பாபு உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 46.
சென்னை: தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை சினிமாவாக எடுக்க பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முன்வருவதில்லை. ஆனால், அதற்கு நேர் எதிராக புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து, வித்தியாசமான படங்களை தயாரித்தவர் டில்லி பாபு. ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி மூலம் டில்லி பாபு தயாரித்த படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. 2015ம் ஆண்டு பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான உறுமீன் திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் டில்லி பாபு. முதல் படம் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக கவனம் ஈர்த்தது.
அதனைத் தொடர்ந்து டில்லி பாபு தயாரித்த மரகத நாணயம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை, ஏஆர்கே சரவணன் இயக்கியிருந்தார். ஃபேண்டஸி காமெடி ஜானரில் வெளியான மரகத நாணயம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதன்பின்னர் இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படத்தை தயாரித்தார் டில்லி பாபு. தொடர்ந்து டில்லி பாபுவின் ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளியான ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் படங்கள் சூப்பர் ஹிட் லிஸ்ட்டில் இணைந்தன. இந்த மூன்று படங்களும் விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் சக்கைப் போடு போட்டன.
அதன் தொடர்ச்சியாக மிரள், கள்வன் படங்களையும் டில்லி பாபு தயாரித்திருந்தார். இதில் ஜிவி பிரகாஷ் நடித்த கள்வன் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி வெற்றிப் பெற்றது. இந்நிலையில் தனது தங்கையின் மகன் தேவ் என்பவரை ஹீரோவாக வைத்து வளையம் என்ற படத்தை தயாரித்து வந்தார் டில்லி பாபு. அதேபோல், சில இளம் இயக்குநர்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்து புதிய படங்களை தயாரிக்க முடிவு செய்திருந்தாராம். இதனிடையே அவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளார். டில்லி பாபுவுக்கு கல்லீரல் கேன்சர் (Liver Cancer) பாதிப்பு இருந்ததாகவும், அதற்காக பெருங்களத்தூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டில்லி பாபு நள்ளிரவு 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையறிந்த திரை பிரபலங்களும் ரசிகர்களும் டில்லி பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வித்தியாசமான படங்களை தயாரித்து வந்த டில்லி பாபுவின் மறைவு, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உயிரிழந்த டில்லி பாபுவின் உடல் பெருங்களத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மாலை 4.30 மணிக்கு டில்லி பாபுவின் இறுதி நிகழ்ச்சி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
What's Your Reaction?