Murder Case : நிர்பயா 2.0.. மருத்துவ மாணவி கொடூர கொலை.. பற்றி எரியும் கொல்கத்தா.. நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்

Delhi AIIMS Doctors Strike on Kolkatta Murder Case : பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கேட்டு மேற்குவங்கம் முழுவதும் மருத்துவர்களும் செவிலியர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளும் மேற்கு வங்க அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளன.

Aug 13, 2024 - 08:32
Aug 13, 2024 - 11:50
 0
Murder Case : நிர்பயா 2.0.. மருத்துவ மாணவி கொடூர கொலை.. பற்றி எரியும் கொல்கத்தா.. நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்
kolkata murder case

Delhi AIIMS Doctors Strike on Kolkatta Murder Case : மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  நாள்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகளுக்கும், சுமார் 1,500 உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் இடம். பெரும்பாலான இடங்களில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். காவலர்கள் மற்றும் சி.சி.டி.வி. கேமராக்களுக்கும் குறைவில்லை. அப்படிப்பட்ட ஓரிடத்தில் பாதி உடலில் ஆடைகளின்றி ஒரு பெண் இறந்துகிடந்தார். அவர் ஒரு முதுநிலை மருத்துவ மாணவி. 

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் உடற்கூறாய்வு அறிக்கையும் அதை உறுதிப்படுத்தியது. உதடு, வலது கை, கழுத்து, வயிறு மற்றும் பிறப்புறுப்பில் காயங்கள் இருந்ததும் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டிருந்ததும் உடற்கூறாய்வில் தெரியவந்தது.

இந்தத் தகவல் கொல்கத்தா மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் விசாரணையை தீவிரப்படுத்தியது காவல்துறை. 

கடந்த 8ஆம் தேதி இரவுப்பணியில் இருந்த பெண் மருத்துவர் தமது நண்பர்கள் 4 பேருடன் கருத்தரங்கு கூடத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் நண்பர்கள் அனைவரும் சென்றுவிட பெண் மருத்துவர் மட்டும் சற்று நேரம் ஓய்வெடுத்துள்ளார்.

அப்போது அதிகாலை 4 மணி அளவில் ப்ளூடூத் இயர்போன் அணிந்த ஒருவர் கருத்தரங்கு கூடத்துக்குள் சென்றுள்ளார். சுமார் 40 நிமிடங்கள் கழித்து அந்த நபர் வெளியேறிய போது  ப்ளூடூத் இயர்போன் இல்லை. அது இறந்து கிடந்த பெண் மருத்துவருக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது. அந்த நபர்தான் கொலையாளி என்பதை உறுதிப்படுத்திய காவல்துறை அவரை தேடத்தொடங்கியது. 

மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் குற்றவாளி என்பதை காவல்துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர். மருத்துவமனைக்குள் அடிக்கடி செல்லும் அவருக்கு கருத்தரங்கு கூடத்தில் சி.சி.டி.வி. கேமரா இல்லை என்பது தெரியும். மேலும் ஓய்வெடுக்க தனி அறை இல்லாததால் இரவுப்பணியில் இருக்கும் மருத்துவர்கள் அங்கு வருவார்கள் என்பதும் தெரியும். அதைப் பயன்படுத்தி பெண் மருத்துவரை சிதைத்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார் சஞ்சய் ராய். 

குத்துச்சண்டை வீரரான அவர் மருத்துவ மாணவியை கடுமையாக தாக்கி அவரை நிலைகுலைய வைத்திருக்கிறார். ஒரு பெண்ணை வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு தமது இருப்பிடத்துக்குச் சென்ற சஞ்சய் எந்த பதற்றமும் இன்றி சில மணிநேரங்கள் உறங்கியிருக்கிறார். அதன் பிறகு ரத்தக்கறை படிந்த தமது ஆடைகளை சுத்தம் செய்து தடயங்களை அழித்திருக்கிறார். எனினும், ப்ளூடூத் இயர்போன் மூலம் அவரை கண்டுபிடித்த காவல்துறையினர் சஞ்சய் ராயை கைது செய்தனர். 

சஞ்சய் ராயின் செல்போனை ஆய்வு செய்ததில் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு தொடர்பான வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. 33 வயதான அவருக்கு ஏற்கனவே 4 முறை திருமணம் நடந்துள்ளதாக கூறுகிறது காவல்துறை. சஞ்சய் ராயின் பாலியல் தொந்தரவை சமாளிக்க முடியாமல் 4 மனைவிகளுமே பிரிந்து சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டிலிருந்து ரத்தக்கறை படிந்த ஷூவும் கண்டறியப்பட்டுள்ளது.

முதலில் பெண் மருத்துவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அதன்பிறகு அவரை சஞ்சய் ராய் வன்கொடுமை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறைக்கு இருப்பதாக தெரிகிறது. அவரை 5 நாட்கள் காவலில் எடுத்துள்ள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கேட்டு மேற்குவங்கம் முழுவதும் மருத்துவர்களும் செவிலியர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளும் மேற்கு வங்க அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளன. 

இம்மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை. இனி இரவுப் பணிக்கு வரமாட்டோம் என மருத்துவம் பயின்று வரும் பிற மருத்துவர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி மருத்துவமனைக்கு ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினர். எமர்ஜென்சி பிரிவைத் தவிர மற்ற பிரிவு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மருத்துவர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்த விவகாரத்தில் உண்மையை மறைக்க முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் மருத்துவ மாணவியின் பெற்றோர், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.  இதற்கிடையே குற்றம் நடந்த ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஷ் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட மாணவி தமது மகள் போன்றவர் என்று தெரிவித்துள்ள அவர், தாமும் ஒரு தந்தை என்ற அடிப்படையில் பதவி விலகுவதாக கூறியுள்ளார். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் சந்தீப் கோஷ் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே பெண் மருத்துவர் படுகொலையில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். குற்றவாளிக்கு கடும் தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியுள்ள அவர், இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். எனினும் மம்தாவின் சமாதானத்தை ஏற்க மருத்துவர்கள் தயாராக இல்லை. 

கடந்த 2012ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நிர்பயா கொலை வழக்கிற்கு பிறகு 2023ம் ஆண்டு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளாப்பட்டு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும்  இன்னும் நாட்டில் பெண்கள் மீதான வன்முறைகளும் பாலியல் ரீதியான வன்கொடுமைகளும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. அப்படி கொல்கத்தாவில் பணியில் இருந்த முதுநிலை பயிற்சி மருத்துவர் ஒருவர், மருத்துவமனை வளாகத்திலேயே மிகக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே பெண்கள் பாதுகாப்பு மீதான நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow