வடகலை - தென்கலை பிரச்சனை.. குடவோலை முறையில் தீர்வு கண்ட இந்து சமய அறநிலையத்துறை

காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் சுவாமி ஊர்வலம் முன்பு பிரபந்தம் பாடி செல்வதில் வடகலை, தென்கலை, பிரிவினர் இடையே நீயா நானா என எழும் பிரச்சனை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குட ஓலை முறையில் தீர்வு காணப்பட்டது.

Jul 9, 2024 - 15:34
 0
வடகலை - தென்கலை பிரச்சனை.. குடவோலை முறையில் தீர்வு கண்ட இந்து சமய அறநிலையத்துறை
Kanchipuram temple

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.இதனை ஒட்டி மாலையில் சுவாமி வீதி உலா புறப்பாடு உற்சவம் நடைபெற இருந்த நிலையில், சுவாமி முன்பு செல்வதில் வடகலை தென்கலை பிரிவினர் இடையே பிரச்சனை ஏற்படும் என்பதால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில்,இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை  அதிகாரிகள் விசாரித்து முடிவு செய்யலாம் என உத்தரவு இடப்பட்டிருந்தது.

அதன்படி இன்று மாலை  விளக்கொளி பெருமாள் கோவிலில் வீதி உலா நடைபெற உள்ள நிலையில் வடகலை தென்கலை பிரிவினர் வரவழைக்கப்பட்டு காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பின்பு சுவாமி முன்பு செல்வதற்கு குடவோலை முறையில் தீர்வு காணலாம் என முடிவு செய்யப்பட்டது.அதன்படி வடகலை, தென்கலை, என எழுதப்பட்ட துண்டு சீட்டுகளை எழுதி சொம்பு ஒன்றில் போட்டு குலுக்கி கோவிலுக்கு வந்த குழந்தையை எடுக்க வைத்தனர்.அதில் சுவாமி முன்பு முதலில்  வடகலை பிரிவினர்  செல்லலாம் என முடிவு வந்தது.இதனை இரு தரப்பினரும் முழு சம்மதத்துடன் ஏற்றுக் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டனர்.

இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்ற கோவிலில் தாத்தா தேசிகர் சன்னதி முன்பாக நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையினால் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏராளமான பக்தர்கள் காத்திருக்க வைக்கப்பட்டதால் முகச்சுழிப்புகளுக்கு உள்ளாகி கடும் சிரமம் அடைந்தனர். மேலும் வடகலை தென்கலை பிரிவினர்களுக்கு இடையே‌ நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தாலும் சாமி முன்பு செல்வதற்கு பழமையான குடவோலை முறையில்  சுமூகமான தீர்வை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow