'தம்பி ஆம்ஸ்ட்ராங் மறைவு ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு பேரிழப்பு'... சீமான் உருக்கம்!
''ஆம்ஸ்ட்ராங் எம்.பி, எம்.எல்.ஏ போன்ற பதவியில் இல்லாவிட்டாலும் அவரது மறைவுக்கு இவ்வளவு மக்கள் கூட்டம் வந்துள்ளதற்கு காரணம், அவர் தான் கற்ற கல்வியை மற்றவர்களும் படிக்க உதவி செய்ததுதான்''
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று முன்தினம் இரவு அயனாவரத்தில் உள்ள தனது வீட்டின் அருகே நின்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை இந்தியா முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி பந்தர் கார்டன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்களும் திரண்டு வந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல் அமைச்சருமான மாயாவதி, விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய மாயாவதி, ''தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது. வீட்டுக்கு வெளியே தேசிய கட்சியின் மாநில தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை தமிழ்நாடு அரசு கைது கைது செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை சிபிஐயிடம் அரசு ஒப்படைக்க வேண்டும்'' என்றார்.
அரசியல் கட்சிகள் தவிர பிரபல இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், பா.ராஞ்சித் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில், சென்னை மாநகராட்சி பந்தர் கார்டன் பள்ளிக்கு வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது கூட்டத்தினர் மத்தியில் பேசிய சீமான், ''தம்பி ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு பேரிழப்பாகும். ஆம்ஸ்ட்ராங் எம்.பி, எம்.எல்.ஏ போன்ற பதவியில் இல்லாவிட்டாலும் அவரது மறைவுக்கு இவ்வளவு மக்கள் கூட்டம் வந்துள்ளதற்கு காரணம், அவர் தான் கற்ற கல்வியை மற்றவர்களும் படிக்க உதவி செய்ததுதான்'' என்று கூறினார்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசை தாக்கிய சீமான், ''ஒரு கட்சியின் மாநில தலைவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களுக்கு தமிழ்நாட்டில் என்ன பாதுகாப்பு இருக்கும்? தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்துள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை'' என்று தெரிவித்தார்.
What's Your Reaction?