மூன்று தங்க பதக்கம் வென்ற காசிமா.. ஒரு கோடி பரிசுத் தொகை அறிவிப்பு
உலக கேரம் போட்டியில் மூன்று தங்க பதக்கம் வென்ற வீராங்கனை காசிமாவிற்கு தமிழ்நாடு அரசு ஒரு கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த மாதம் 6-வது உலக கேரம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், கலந்து கொள்வதற்கான நிதியுதவி கோரிக்கை TN சாம்பியன் அறக்கட்டளை மூலம் தமிழ்நாடு அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த தமிழ்நாடு அரசு மூன்று வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரருக்கு தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீதம் மொத்தம் ஆறு லட்சம் ரூபாயை வழங்கினர்.
6-வது உலக கேரம் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை காசிமா தனிநபர், இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்க பதக்கமும், வீராங்கனைகள் மித்ரா இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்க பதக்கமும், நாகஜோதி குழு போட்டியில் ஒரு தங்கம் மற்றும் இரட்டையர் பிரிவில் ஒரு வெள்ளி பதக்கம் வென்று நாடு திருப்பினார்கள்.
வீராங்கனை காசிமா 3 தங்கப் பதங்களை வென்று சாதித்திருந்தார். இந்தச் சாதனையை அவர் 17 வயதில் நிகழ்த்திக் காட்டி இருந்தார். ஆனால், குகேஷுக்கு கிடைத்த எந்த பாராட்டும், ஊக்கத்தொகையும் இவருக்கு கிடைக்கவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து, காசிமாவிற்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், காசிமாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வீராங்கனைகள் காசிமா, மித்ரா, நாகஜோதி ஆகியோரை சென்னை விமான நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் மற்றும் விளையாட்டு விடுதி வீரர்கள் ஆகியோர் சிறப்பாக வரவேற்றார்கள்.
மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனிநபர், இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்க பதக்கம் வென்ற காசிமாவிற்கு சிறப்பு ஊக்க தொகையாக ஒரு கோடி ரூபாயும், இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்க பதக்கம் வென்ற மித்ராவிற்கு ஐம்பது லட்சம் ரூபாயும், குழு போட்டியில் ஒரு தங்கம் மற்றும் இரட்டையர் பிரிவில் ஒரு வெள்ளி பதக்கம் வென்ற நாகஜோதிக்கு ஐம்பது லட்சம் ரூபாயும் வழங்கி கெளரவித்தார்.
தொடர்ந்து, ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டத்தில் நடைபெற உள்ள 6 வீதமான கார்டிங் பந்தய போட்டியில் கலந்து கொள்ள நிதியுதவி கோரிய தமிழக வீரர் ரிவன் தேவ் ப்ரீதமிற்கு ஐந்து லட்சம் ரூபாயை உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார். இத்தொகை TN சாம்பியன் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?