ஹவாலா பணம் பறிப்பு.. பலே பிளான் போட்ட காவல்துறை அதிகாரி
ஹவாலா பணத்தை பறித்து சென்ற புகாரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் உதவி ஆய்வாளரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நடராஜன் தெருவில் வசிப்பவர் முகமது கவுஸ். இவர் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஜூனைத் அகமது என்பவரிடம் வேலை செய்து வருகிறார். கடந்த 15 -ஆம் தேதி முகமது கவுஸை அழைத்து புதிய சிடி ஸ்கேன் மிஷின் வாங்க வேண்டும் என்று கூறி 20 லட்சம் ரூபாயை ஜுனைத் அகமது கொடுத்தார். முகமது கவுஸ் பணத்துடன் சென்னை வந்த நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு போன் செய்த ஜூனைத் அகமது, திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் ஹரீஷ் என்பவர் பத்து லட்சம் ரூபாய் தர வேண்டியுள்ளது அவரிடம் பணத்தை வாங்கி கொள் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பணத்தை வாங்குவதற்காக முகமது கவுஸ் பைக்கில் ஏற்கனவே வைத்திருந்த 20 லட்சம் ரூபாயுடன் பழைய வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவல்லிக்கேணிக்கு சென்றார். ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை பேருந்து நிலையம் அருகே சென்ற போது திடீரென காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சீருடையில் பைக்கில் வந்து முகது கவுஸ் பைக்கை சோதனை செய்தபோது பணம் இருந்ததை பார்த்து உதவி ஆய்வாளர்கள் மூன்று பேருக்கு போன் செய்து அழைத்துள்ளார்.
காரில் வந்த மூன்று பேரும் தாங்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் என்றும், வருமானவரித்துறை அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என கூறி முகமது கவுஸை காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். பிறகு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அருகே சென்ற போது மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடந்த சம்பவத்தை ஜூனைத் அகமதுவிடம் முகமது கவுஸ் தெரிவித்துள்ளார். இதன் பிறகு முகமது கவுஸ் சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதன் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங் என்பவர் தான் சோதனை நடத்தி வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது தெரிய வந்ததுள்ளது. பின்னர், ராஜா சிங்கை பிடித்து விசாரித்த போது, தான் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் தான் ஒப்படைத்தேன் என்றும், தனக்கும் வழிப்பறிக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறியதாக தெரிகிறது. ஆனால் அவர் ஹவாலா பணம் பிடிப்பட்டது குறித்து திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளருக்கோ, உதவி ஆணையருக்கோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால் ராஜா சிங்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வருமானவரித்துறை அதிகாரிகளாக வந்த மூன்று பேரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
What's Your Reaction?