கல்யாண ராணி சத்யா வெளியே.. மூளையாக செயல்பட்ட தோழி சிறைக்கு உள்ளே..
தாராபுரத்தில் வாலிபரை திருமணம் செய்து பண மோசடி செய்த பெண் கல்யாண ராணி சத்யாவிற்கு மூளையாக செயல்பட்ட, தமிழ்ச்செல்வியை தாராபுரம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த் (29). மாட்டு தீவன விற்பனை நிலையம் வைத்து உள்ளார். மகேஷ் அரவிந்துக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செல்போன் ஆப் ஒன்று மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சத்யா (30) என்பவர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். மேலும் செல்போன் எண்களையும் பரிமாறி உள்ளனர்.
நாளடைவில் பல மாதங்கள் தொடர்ந்து இவர்கள் பேசியதால், இருவரும் காதலித்து உள்ளனர். இதற்கிடையே சத்யாவின் உறவினர் என தமிழ்ச்செல்வி என்பவரும் அறிமுகமாகி உள்ளார். இதன் பின்னர் மகேஷ் அரவிந்த் மற்றும் சத்யா ஆகியோர் சந்தித்து வந்துள்ளனர். இதற்கிடையே தமிழ்செல்வி மற்றும் சத்யா இருவரும் சேர்ந்து அடிக்கடி மகேஷ் அரவிந்திடம் பல்வேறு காரணங்களை கூறி பணம் பெற்று வந்துள்ளனர். அவரும் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதி தொப்பம்பட்டியில் இருவருக்கும் தமிழ்ச்செல்வி திருமணம் செய்து வைத்துள்ளார். இதன் பின்னர் மகேஷ் அரவிந்த் சத்யாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவரது உறவினர்கள் தாலிக்கொடி உள்பட 12 பவுன் நகை சத்யாவுக்கு எடுத்து கொடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி... சிக்கியது எப்படி?
இதன் பின்னர் சத்யா அடிக்கடி பல ஆண்களுடன் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனால் அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் மகேஷ் அரவிந்த் அவரது செல்போனை பார்த்தபோது அதில் ஆண்கள் சிலருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை பார்த்துள்ளார். இது குறித்து கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சத்யா திடீரென வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ் அரவிந்த், இது குறித்து தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சத்யா திருமணம் செய்து ஏமற்றிவிட்டதகவும் 50 ஆயிரம் மற்றும் 12 பவுன் நகைகளை மோசடி செய்துவிட்டார். பலபேரை இதுபோல் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
விசாரித்த போது, சத்யாவின் ஏமாற்று வேலையில் மாடு மேய்ப்பவரில் இருந்து காவல் துறையினர், தொழில் அதிபர் என பலரை திருமணம் செய்து பணம், நகைகளை ஏமாற்றியது தெரியவந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் பதுங்கி இருந்த சத்யாவை தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்யாவை சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து, சத்யாவிற்கு மூளையாகவும் புரோக்கர் ஆகவும் செயல்பட்ட தமிழ்ச்செல்வியை, கடந்த மூன்று மாதமாக புதுச்சேரி, கேரளா, கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு போன்ற இடங்களில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த தமிழ்ச்செல்வியை தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் கரூரில் வைத்து கைது செய்தனர். மேலும், தமிழ்ச்செல்வி மீது வழக்குப்பதிவு செய்து உடுமலைப்பேட்டை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, சத்யா தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் 60 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும், குற்றப்பத்திரிகை இன்னமும் தாக்கல் செய்யவில்லை என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்து நீதிபதி பி.தனபால், சத்யாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?