NellaiMayor: என்ன நடக்கிறது நெல்லை திமுகவில்..? கட்சியின் முடிவுக்கு எதிராக திமுக மாமன்ற உறுப்பினர்
பரபரப்பாக நடைபெற்ற நெல்லை மேயர் தேர்தலில், ராமகிருஷ்ணன் என்ற கிட்டு வெற்றிப் பெற்றார். அதேநேரம் கட்சியின் முடிவுக்கு எதிராக திமுக மாமன்ற உறுப்பினரே ராமகிருஷ்ணனுக்கு எதிராக களத்தில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நெல்லை: நெல்லை எங்கள் எல்லை என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அடிக்கடி கூறுவர். அதன்படி, நெல்லை தொகுதியில் பலமுறை திமுக தனிப்பெரும்பான்யுடன் வெற்றிப் பெற்றுள்ளது. ஒரு காலத்தில் அதிமுகவின் கோட்டையாக இருந்த இந்த நெல்லை மெல்ல மெல்ல திமுகவின் இரும்பு கோட்டையாக மாறியது. இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், 55 வார்டுகளில் தனது கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்டது திமுக. இறுதியாக 51 இடங்களில் வெற்றி கண்டது. எப்படியும் தனது ஆதரவாளர்களில் ஒருவரை மேயர்-ஆக்கிவிட வேண்டும் என பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் அதிக முயற்சிகள் எடுத்தார்.
இதனால் வெற்றிப் பெற்ற கவுன்சிலர்களை அழைத்துக்கொண்டு குற்றாலம் நோக்கிச் சென்றார். அதன் பலனாக அவரது ஆதரவாளர் சரவணன் என்பவர் மேயராக பொறுப்பேற்றார். ஆனால், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக முன்னாள் மேயர் சரவணனுக்கும் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாபிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து, மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கொண்டு வந்தார் அப்துல் வஹாப். இதன் காரணமாக கட்சி மேலிடம் பலமுறை அவரை கூப்பிட்டு சமாதானம் செய்தது. இதனையடுத்து ஒருமுறை கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நெல்லை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளின் மேயர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த மாதம் அறிவித்தனர். நெல்லையில் மேயர் பொறுப்பு வகித்து வந்த சரவணன், தனது சொந்த காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால், நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் கட்ட ரேசில் மேயர் பதவிக்கு கிட்டு என்ற ராமகிருஷ்ணன், கோட்டைமேடு கருப்பசாமி, துணை மேயர் ராஜு உள்ளிட்ட நால்வரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
தொடர்ச்சியாக பல்வேறு யூகங்களுக்கு மத்தியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், கிட்டு என்ற ராமகிருஷ்ணனை மேயர் பதவிக்கு தேர்ந்தெடுத்தார். இதனை அமைச்சர்கள் கே.என் நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். மேலும் அதற்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஆக.5) நடைபெறவிருந்ததால், காலையில் வேட்பு மனு தாக்கலும் செய்யப்பட்டது. காலை 10 மணி அளவில் மாமன்ற கூட்ட அரங்கிற்கு சென்ற மாமன்ற உறுப்பினர்கள், கடும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தேர்தல் குறித்த ரகசியங்கள் வெளியாகிவிடக் கூடாது என்பதற்காக, அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினர்களின் செல்போன்களையும் அரசு அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர்.
அப்போது பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் மாமன்ற உறுப்பினர் அலுவலகம் சென்றார். முதலில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்திற்குப் பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் நீண்ட நேரம் அங்கே இருக்காமல், உடனடியாக கிளம்பிச் சென்றார். இதனிடையே திமுக தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிராக, அதே கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினருமான பவுல்ராஜ், தானும் மேயர் பதவிக்கு போட்டியிடுவதாக வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, மதிமுக மாமன்ற உறுப்பினர்களான சங்கீதா, வசந்தா ஆகியோர் இவரை முன்மொழிந்து வழிமொழிய தேர்தல் களம் சூடு பிடித்தது.
இந்நேரத்தில் மாமன்ற அரங்கிற்கு தாமதமாக சென்ற முன்னாள் மேயர் சரவணன், முதலில் வளாகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு திரும்ப அனுப்பப்பட்டார். பின்னர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர் மாநகராட்சி வளாகத்துக்குள் சென்றார். இந்நிலையில் அவர் தாமதமாக வந்திருந்ததாக கூறிவிட்டு முப்பது நிமிடத்திற்கு மேலாக காக்க வைக்கப்பட்டு பின்னர் வாக்குப்பதிவு செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டார். அரங்கிற்குள் அமர்ந்திருந்த 54 மாமன்ற உறுப்பினர்களின் நிலை, அவர்கள் யாருக்கு வாக்கு செலுத்தினார்கள் உள்ளிட்ட தகவல்கள் கசிந்து விடக்கூடாது என்பதற்காக அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும் படிக்க - ரூ.10 லட்சம் கடனுக்கு ரூ.1 கோடி வீட்டை கேட்டு மிரட்டல்
மதியம் ஒரு மணியளவில் திமுக மேயர் வேட்பாளரான கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வெளியில் வந்து செய்தியாளர்களை நோக்கி தம்ஸ்-அப் காட்டிச் சென்றார். இதனையடுத்து மொத்தம் 54 வாக்குகள் பதிவானதாகவும், இதில் 30 வாக்குகளைப் பெற்று திமுகவின் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் மேயராக வெற்றி பெற்றதாக மாநகராட்சி ஆணையாளர் சுகபத்ரா அறிவித்தார். திமுகவின் மேயர் வேட்பாளராக திடீரென போட்டியிட்ட பவுல்ராஜ், 23 வாக்குகள் பெற்றதாகவும், ஒரு வாக்கு செல்லாதது எனவும், ஒரு அதிமுக கவுன்சிலர் வரவில்லை எனவும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேயர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தனக்கு 30 பேர் வாக்களித்துள்ளதாகவும், வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து பணி செய்ய தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தின் நம்பர் ஒன் மாநகராட்சியாக நெல்லை மாநகராட்சி உயர்த்துவேன் எனவும் கூறினார். அதேபோல் பவுல்ராஜ் குறித்து தான் ஏதும் பேச விரும்பவில்லை எனவும், வளர்ச்சிப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த கட்சி பிரமுகர்கள் சிலர், 51 மாமன்ற உறுப்பினர்களால் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி தேர்ந்தெடுத்த சரவணணே இரண்டு வருடங்கள் தாக்குப்பிடிப்பதற்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. பலமுறை தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள அவர் சென்னை சென்று வந்தார். சாதியின் அடிப்படையில் இந்த வாக்குகளை பெரும்பான்மையான சமூகத்தைச் சார்ந்த கிட்டு என்ற ராமகிருஷ்ணன் பெற்றுள்ளதாகவும், இவர் அதிக நாட்கள் தாக்குப் பிடிப்பாரா என்பது குறித்து தங்களுக்கு தெரியவில்லை எனவும் கூறினர்.
What's Your Reaction?