Madurai : ரூ.10 லட்சம் கடனுக்கு ரூ.1 கோடி வீட்டை கேட்டு மிரட்டல் - துணை மேயர் மீது மூதாட்டி புகார்

Madurai Deputy Mayor Nagarajan Threatened Old Lady : 10 லட்சம் ரூபாய் கடனுக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை கேட்டு, பாதுகாவலரை வைத்து துப்பாக்கியால் சுட கூறி துணை மேயர் மிரட்டுவதாக மூதாட்டி மகனுடன் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

Aug 5, 2024 - 18:48
Aug 6, 2024 - 10:08
 0
Madurai : ரூ.10 லட்சம் கடனுக்கு ரூ.1 கோடி வீட்டை கேட்டு மிரட்டல் - துணை மேயர் மீது மூதாட்டி புகார்
மதுரை மாநகராட்சி மேயர் மீது கொலை மிரட்டல் புகார்

Madurai Deputy Mayor Nagarajan Threatened Old Lady : மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் 2ஆவது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த வசந்தா இவருக்கு ஒரு ஆண் மற்றும் 5 பெண் பிள்ளைகள் என ஆறு பிள்ளைகளுடன் இருந்துவருகிறார். இவரது மகன் முருகானந்தம் அதே பகுதியில் வீட்டின் அருகிலயே சலூன் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் வசந்தா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் (எ) கோழிக்குமார் என்பவரிடம் வசந்தா தனது வீட்டை அடமானமாக வைத்து 10 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக கடனை முழுமையாக செலுத்தி விடுகிறேன் வீடு அடமான கடன் பத்திரத்தை ரத்து செய்து கொடுங்கள் என கோழி குமாரிடம் வசந்தா கேட்டுள்ளார்

அதற்கு 15 லட்சம் ரூபாய் தருகிறேன் வீட்டை முழுவதுமாக கிரயம் செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து தனது வீட்டை எழுதிகேட்டு தன்னை தாக்கி மிரட்டியதாக கூறி ஜெய்ஹிந்த்புரம் குமார் (எ) கோழிக்குமார் மற்றும் கணேசன் (எ) வாய் கணேசன், முத்து (எ) புரோக்கர் முத்து ஆகிய 3 பேர் மீதும் மே மாதம் 7ஆம் தேதி ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் வசந்தா புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மூவர் மீதும் ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வழக்கானது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை 30ஆம் தேதியன்று துணை மேயர் நாகராஜன் மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் மற்றும் புரோக்கர் முத்து ஆகியோர் நேரில் வந்து கோழிகுமாருக்கு ஆதரவாக பேசி வீட்டை கேட்டும், முந்தைய வழக்கில் சாட்சி சொல்ல கூடாது என கூறியும் தங்களை பொது இடத்தில் வைத்து கற்களால் தாக்க முயன்றதோடு, சாதிய ரீதியாக ஆபாசமாக பேசி மிரட்டி உள்ளார்.

புரோக்கர் முத்து என்பவர் வீட்டிற்குள் புகுந்து தீயை வைத்து எரித்து கொன்று விடுவோம் என மிரட்டியதாகவும், அப்போது நாகராஜன் கீழே கிடந்த கல்லை எடுத்து, தலையில் கல்லை போட்டு கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், காவல்நிலையத்தில் உனது மகன் காலை உடைத்தால் தான் சரியாக இருக்கும் என கூறியதோடு ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்திற்கு வசந்தாவின் மகனை அழைத்துச் சென்றதோடு  முருகானந்தம் புகார் மனு அளித்தபோது துணைமேயர் பெயரை எழுதக்கூடாது என கூறியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காவல்நிலையத்தில் இருதரப்பினரும் சமரசம் செய்வது போல எழுதி வாங்கியுள்ளதாகவும், எங்களது வீட்டை எழுதி வாங்கி மிரட்டி வரும் கோழிக்குமாரின் ஆதரவாளர்களான துணைமேயர் நாகராஜன் அவரது தம்பி ராஜேந்திரன் மற்றும் புரோக்கர் முத்து ஆகியோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, மூதாட்டி வசந்தா மற்றும் அவரது மகன் முருகானந்தம் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிசிடிவி பதிவு ஆதாரங்களுடன் புகார் மனு அளித்தனர். மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் அவரது மனைவி பெயரில் பொது இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக ஏற்கனவே சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் மூதாட்டிக்கு கொலை மிரட்டல் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்த துணைமேயர் நாகராஜன், “தன் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தன் மீது இதுபோன்ற பின்புலத்துடன் பொய்யான புகார்களை அளித்துவருகின்றனர் என்றார். எனது சாவி கீழே விழுந்ததால் குனிந்து எடுத்தேன் அவர்களை தாக்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பாஜகவின் பின்புலத்தில் தன் மீது பொய் புகார் அளிக்கின்றனர்.

சிசிடிவியில் உள்ள வீடியோவில் சம்பவம் நடைபெற்ற நாளன்று தனது சகோதரனின் மீது முருகானந்தம் எச்சில் துப்பியதால் அது குறித்து கேட்பதற்காக நான் சென்றேன். எனக்கும் கோழி குமாருக்கும் தொடர்பு இல்லை; தவறாக புகார் அளிக்கிறார்கள். ஏற்கனவே என் மீது இது போன்று வேறொரு பிரச்சனையை கொண்டுவந்தவர்களே, மீண்டும் பின்புலமாக இருந்து தூண்டிவிடுகின்றனர்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow