மீண்டும் ரெட் அலர்ட்.. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் கடந்த 24-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக மாறியது. இந்த புயல் நேற்று நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரியில் நேற்று இரவு முதல் தற்பொழுது வரை காற்றுடன் கூடிய கனமழையானது பெய்து வருகிறது. மேலும், பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து சாலைகளில் விழுந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், வெங்கட்ட நகர், முதலியார் பேட்டை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட பல்வறு பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதுவரை 551 பேர் மீட்பு படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் அலை பல அடி உயரத்திற்கு எழும்பி வருகிறது.
மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை நான்கு பேர் உயிர் இழந்துள்ளனர். அதன்படி உயிர் இழந்தவர்கள் கோவிந்த சாலை, லாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகூர் பகுதியில் 15 குடிசை வீடுகளும், வில்லியனூர் மற்றும் பாகூர் தொகுதிகளில் தலா ஒரு கல் வீடும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக நாளை புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார். தொடர்ந்து, விழுப்புரத்தில் தொடர் மழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?