காஞ்சிபுரம்.. மதுரை மேயர்களுக்கும் சிக்கல்.. கலகக்குரல் எழுப்பும் கவுன்சிலர்கள்

காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, 33 கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர். நெல்லை, கோவை மேயர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து காஞ்சிபுரம், மதுரை மேயர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது. கோவில் நகரங்களில் என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம்.

Jul 8, 2024 - 16:11
Jul 10, 2024 - 12:42
 0
காஞ்சிபுரம்.. மதுரை மேயர்களுக்கும் சிக்கல்.. கலகக்குரல் எழுப்பும் கவுன்சிலர்கள்
Kanchipuram mayor

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த எம்.மகாலட்சுமி யுவராஜ் பெரும்பான்மையான உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு மேயராக பொறுப்பேற்றுக் கொண்டாவர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். 50 வார்டுகளுக்கான தேர்தலில் தி.மு.க. கூட்டணி 32 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 9 இடங்களிலும், பா.ம.க- 2 இடங்களிலும், பா.ஜ.க.- 1 இடத்திலும், சுயேச்சைகள் 6 இடத்திலும் வெற்றி பெற்றனர்.
இதில் 9-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.மகாலட்சுமி யுவராஜை காஞ்சிபுரத்தின் மேயர் வேட்பாளராக தி.மு.க. தலைமை அறிவித்தது.

அவருக்கு எதிராக திமுகவை சேர்ந்த சூர்யா சோபன்குமார் போட்டியிட்டார். அவருக்கு சுயாட்சிகள்,  பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கவுன்சிலர்கள் ஆதரவளித்தனர். இதனால் முதலில்  பெரும்பான்மையை நிரூபிக்கவே, மாநகராட்சி பிரச்சனை ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து மகாலட்சுமி யுவராஜ் 29 வாக்குகள் பெற்று காஞ்சிபுரத்தின் முதல்  மேயராக பதவி  ஏற்றார்.சூர்யா சோபன்குமார் 20 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். புதிய மேயராக பதவி ஏற்றதிலிருந்து, மகாலட்சுமி யுவராஜுக்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தற்பொழுது காஞ்சிபுரத்தின் துணை மேயராக உள்ளார். துணை மேயர் தரப்புக்கும் மற்றும் மேயர் தரப்பிற்கும் இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.  அதே போன்று மாநகராட்சி கூட்டங்களின்போது, பலமுறை சலசலப்பு போராட்டங்களும் நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில்தான் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிராக 33 கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மேயரின் கணவர் யுவராஜ் பண வசூலில் ஈடுபடுகிறார் என கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.பாதாள சாக்கடை பணி, குடிநீர் பிரச்சினைகளை சரி செய்ய முடியவில்லை எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத்திட்டம் மேற்கொள்ள அனுமதி கிடைத்தது. அதற்கான ஒப்பந்த புள்ளி தலைமை சொல்லும் நபருக்கு கிடைத்துள்ளதாகவும் இதன் மூலம் மேயர் மகாலட்சுமிக்கு பெரிய அளவில் தொகை கிடைத்துள்ளதாகவும் அதனை வைத்து கிழக்கு கடற்கரை சாலையில் பங்களா, போரூரில் வீடு, வையூரில் பல ஏக்கர் நிலம்,ஆகியவற்றை வாங்கியதாக புகார் கூறியுள்ளனர் கவுன்சிலர்கள். அதே நேரத்தில் புகார்கள் அனைத்தும் பொய்யானவை என உளவுத்துறை விசாரித்து ரிப்போர்ட் அனுப்பியுள்ளதாம். 

இதனிடையே மகாலட்சுமி யுவராஜ் மேயராக தொடர்ந்து செயல்பட்டால் எங்கள் பகுதி மக்களின் பிரச்சினைகளை சரி செய்யவே முடியாமல் போய் விடும்.எனவே மேயரை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும். அவர் பெரும்பான்மையை நிருபிக்க மாமன்ற கூட்டத்தை கூட்டஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கையெழுத்திட்டு கொடுத்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.கவுன்சிலர்களின் இந்த  முடிவு  காஞ்சிபுரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேயருக்கு எதிராக தி.மு.க., மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கியுள்ள நிலையில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்களை அழைத்து,நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு சமாதானம் செய்து உள்ளார்.திமுக மேயருக்கு எதிராக, திமுக கவுன்சிலர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கவுன்சிலர் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு, மேயர் மற்றும் மேயரின் கணவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.பிரச்னையின்றி அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட அமைச்சர் கே.என் நேரு அறிவுறுத்தியதாகவும் கவுன்சிலர்களின் குற்றச்சாட்டு குறித்து, மேயர் மகாலட்சுமியிடம், அமைச்சர் நேரு காட்டமாக  கேட்டார். மாநகராட்சியில் எந்த விதிமீறலும், முறைகேடும் நடக்கவில்லை என, மேயர் தரப்பினர் அமைச்சரிடம் விளக்கம் அளித்தனர்.

மேயர் மகாலட்சுமியின் தலைமையின் கீழ் எங்களால் பணியாற்ற முடியாது எனவும் மேயரை கட்டாயம் மாற்ற வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தினோம். இதுகுறித்து கட்சி தலைமைக்கு தெரிவிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளதாக கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி மேயருக்கு எதிராகத்தான் முதல் கலகக்குரல் வெடித்தது. அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளரான இந்திராணி பொன் வசந்த், மதுரை மேயரானதிலிருந்தே மதுரை மாவட்ட திமுகவிற்குள் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டு மதுரையில் மழை வெள்ளத்தின் போது அமைச்சரே தெரு தெருவாக ஆய்வு நடத்தி மாநகராட்சி மேயருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.தற்போது மேயருக்கு எதிரான எதிர்ப்பு குரல் சற்றே ஓய்ந்திருந்தாலும் எந்த நேரத்திலும் மதுரை மேயர் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. நெல்லை, கோவை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் எழுப்பிய கலகக்குரல் மேயர்களை ராஜினாமா செய்ய வைத்தது. காஞ்சி,மதுரையில் கவுன்சிலர்கள் சமாதானம் அடைவார்களா? பார்க்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow