தனக்கு தொடர்பு இல்லை; அமலாக்கத்துறை கைதை ரத்துசெய்ய வேண்டும் - ஜாபர் சாதிக் மனு ஒத்திவைப்பு
சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமலாக்க துறை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய ஜாபர் சாதிக் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என அமலாக்கதுறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கடத்தியதாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிகை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ம் தேதி கைது செய்தனர்.
போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் செயல்பட்டதாகவும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களை ஹெல்த் மிக்ஸ் பவுடர் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து கடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
மேலும், தமிழ்நாடு, டெல்லி போன்ற இடங்களிலிருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தலைச் செய்துவந்ததாகவும், டெல்லியிலுள்ள ஒரு குடோனில் நடத்திய சோதனையில் 50 கிலோ எடையுடைய போதைப்பொருள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருள் கிடைத்ததாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது, சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், போதைப் பொருள் கடத்தல் வழக்குக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தன் மீது தவறான உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜாபர் சாதிக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டவிரோதமான கைதை சட்டப்பூர்வமாக்கும் வகையில், தனக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை, திஹார் சிறையில் உள்ள தன்னை அமலாக்க துறை வழக்கில் கைது செய்வது தொடர்பாக வாரண்ட் பெற்றுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ், கைதுக்கு எதிராக ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே அது குறித்து வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
What's Your Reaction?