தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா?.. வைகோ, சீமான் ஆவேசம்.. மத்திய அரசுக்கு கண்டனம்!
''பீகார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும்தான் இந்தியாவில் உள்ளனவா? இதர மாநில மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லையா? அல்லது வரி செலுத்தவில்லையா?'' என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த நிலையில், தமிழ்நாட்டுக்கு எந்தவித திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
'இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்' என்று முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய பட்ஜெட்டில் அசாம், உத்தரகாண்ட், சிக்கிம், இமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ள பாதிப்புக்கு சிறப்பு நிதி ஒதுக்கியுள்ள ஒன்றிய அரசு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் வஞ்சித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
இதேபோல் பீகார், ஆந்திரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் வைத்த கோரிக்கைகளை ஒன்றிய நிதியமைச்சர் புறந்தள்ளி இருக்கிறார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லை. கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லை.
பண மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி, கொரோனா தாக்கம், மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் அடுத்தடுத்து நெருக்கடிகளை சந்தித்து வரும் கோவை மாவட்ட தொழில் துறை வளர்ச்சிக்கு திட்டங்கள் எதுவும் இல்லாததும் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது'' என்று கூறியுள்ளார்.
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமானது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ''இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அளித்துள்ள 2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் சலுகை அறிவிப்புகளாக மட்டுமே அமைந்துள்ளது வெட்கக்கேடானது.
விவசாயம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத்தேவைகளுக்கு போதிய நிதியை ஒதுக்காததது நாட்டு மக்களின் நலன்மீதான பாஜக அரசின் அக்கறையின்மையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறது. தங்கம், வெள்ளி, அலைபேசி உள்ளிட்ட விலை உயர் ஆடம்பர பொருட்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம்கூட அன்றாடம் மக்களின் பசியைப்போக்கும் வேளாண்மைக்கு அளிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
பாஜக அரசின் முதன்மை கூட்டணிக் கட்சிகள் ஆளும் பீகாருக்கு 26000 கோடிகளும், ஆந்திராவிற்கு 15000 கோடிகளும் ஒதுக்கியுள்ள இந்நிதிநிலை அறிக்கை மூலம், இந்தியாவின் இதர மாநில மக்களைத் தெருக்கோடியில் நிறுத்தியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பீகார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும்தான் இந்தியாவில் உள்ளனவா? இதர மாநில மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லையா? அல்லது வரி செலுத்தவில்லையா? இந்நிதிநிலை அறிக்கையிலிருந்து இந்தியா முழுமைக்குமான பாஜகவின் வீழ்ச்சி உறுதியாய் தொடங்கும்'' என்று சீமான் கூறியுள்ளார்.
What's Your Reaction?