தமிழ்நாடு மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சியா?.. பாஜகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
''வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த நிலையில், ஒருபக்கம் வரவேற்பும், மறுபக்கம் எதிர்ப்பும் எழுந்துள்ளன. அதாவது ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி கிடையாது, பெண்களுக்கு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும், புதிதாக வேலைக்கு சேருபவர்களுக்கு முதல் மாதம் அரசு ஊக்கத்தொகை வழங்கும் போன்ற அறிவிப்புகள் வரவேற்பை பெற்றுள்ளன.
மறுபக்கம், ஆந்திர, பீகார் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தது, தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென்மாவட்டங்களை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ''2024-2025ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
இந்த வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை. குறிப்பாக தமிழகத்திற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.
தமிழகத்திற்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு வாக்களித்து, 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழக மக்கள் வெற்றிபெறச் செய்தார்கள். திமுக-கூட்டணிக் கட்சிகளுக்கு 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் பெற்றுத் தராதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் 2019 முதல் 2024-ஆம் ஆண்டுவரை தமிழகத்தின் நன்மைக்காக எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் இருந்தது போல், அமைதியாக காலம் தள்ளுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய பட்ஜெட் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, செல்பேசிகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டிருப்பது, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது. வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பது போன்றவை வரவேற்கத்தக்கவை.
அதே வேளையில் தமிழ்நாட்டிற்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும் செய்யப் படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்புத் திட்டங்கள், பாசனத் திட்டங்கள் போன்றவற்றையும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படும் போது சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.
What's Your Reaction?