அரசியல்

உதயநிதியின் தடால் புடால் விருத்து.. முக்கிய தலைகளை தாண்டி யாருக்கும் அழைப்பில்லை... என்ன காரணம்...?

Minister Udhayanidhi Stalin : லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக, கூட்டணி வெற்றி பெற்றது. அதற்காக உழைத்த கட்சி பொறுப்பாளர்களை உபசரிக்கும் வகையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், நேற்று அமைச்சர் உதயநிதி விருந்து அளித்தார்.

உதயநிதியின் தடால் புடால் விருத்து.. முக்கிய தலைகளை தாண்டி யாருக்கும் அழைப்பில்லை... என்ன காரணம்...?
Minister Udhayanidhi Stalin

Minister Udhayanidhi Stalin : டாக்டர் கோகுல், மணிமாறன், ஹெலன் டேவிட்சன், அஞ்சுகம், ராணி, முத்துசெல்வி உட்பட 234 சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களும் பங்கேற்றனர். திமுக, ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தவிர, வேறு யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

விருந்தில் சீரக சம்பா மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன் வறுவல், மிளகு கொத்துக் கோழி, மட்டன் கோலா உருண்டை, சிக்கன் தொக்கு, பரோட்டா, முட்டை தோசை, நாட்டுக்கோழி குருமா, தயிர் பச்சடி மற்றும் மாம்பழம் ஸ்வீட் ரோல், முந்திரி பிரட் அல்வா உள்ளிட்ட அசைவம் மற்றும் சைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டன. இந்த உணவு வகைகளை, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் குழுவினர் தயாரித்துள்ளனர்.

இது குறித்து குறிப்பிட்டு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் அமைத்துள்ள, 2026 சட்டமன்றத் தேர்தல்(TN Assembly Election 2026) ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், சட்டமன்றத் தொகுதி வாரியாக செயல்பட்டு வரும் தொகுதி பார்வையாளர்களை குறிஞ்சி இல்லத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் 40- க்கு 40 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெற சிறப்புற பணியாற்றிய தொகுதி பார்வையாளர்களுக்கு அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம்.

மேலும், நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களையும் - சாதனைகளையும் பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று, 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்துக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத் தருகிற வகையில் அயராது உழைப்போம் என்று உரையாற்றினோம்” என்று தெரிவித்தார்.

பின்னர் பேசுகையில், ''லோக்சபா தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. அதே சிந்தனையில், சட்டசபை தேர்தல் வெற்றிக்கும் பணியாற்ற வேண்டும்'' என்றார். இதுதான், தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாக உள்ளது. 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகவே விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

கடந்த சில காலமாகவே உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக ஊகங்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. அதற்கு பதிலளித்த உதயநிதி, வதந்திகளை நம்பாதீர்கள் என்று சொன்ன கையோடு, எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும் என்னுடைய மனதிற்கு மிக நெருக்கமான பொறுப்பு என்பது திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு மட்டும்தான் என்று பதில் அளித்து இருந்தார்.

இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்த தடால் புடால் விருந்து முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. துணை முதலமைச்சர் பொறுப்போ அல்லது கூடுதல் பொறுப்புகளோ வழங்கப்படுவதற்கான முக்கிய முன்னெடுப்பாக இதனை கருத வேண்டி உள்ளதாகவும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனாம்பேட்டையில் நடைபெற்ற திமுக இளைஞர் அணியின் 45ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், 2026-ஆம் ஆண்டு என்ன நடந்தாலும் சரி... எத்தனைக் கூட்டணிகள் வந்தாலும் சரி... மீண்டும் தமிழ்நாட்டை ஆளப்போவது நம்முடைய கழகத் தலைவர் அவர்கள்தான். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான், அது மட்டுமே நம் இளைஞர் அணியின் இலக்காக இருக்க வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சியும், தனது செல்வாக்கை தமிழகத்தில் வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கி வருகிறது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை, “கடந்த 2021 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் நேரத்தில், எங்களுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் அளிக்கவில்லை என, கட்சியினர் மத்தியில் பெரிய மனக்குறை உள்ளது. ஏதோ ஒரு விதத்தில் உதாசீனப்படுத்துவது போலத்தான் நடந்து கொள்கின்றனர்.

நாம் நம்மை முழுமையாக வலுப்படுத்திக் கொள்ளும்போது, இதெல்லாம் தானாகவே மறைந்து விடும். காங்கிரஸ் வலிமையாக இருந்தால் கவுரவம் கிடைக்கும் என்றும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் தனியாக நின்று வெற்றிபெற போவதாகவும், அதற்காக 19, நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி அனுப்பப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

அதேபோல, இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை மின் கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைக்கு, திமுக அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் திமுக அரசை விமர்சித்து வருகிறது.

இதுவரையிலும், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதை திமுகவின் கொள்கையாக இருந்து வந்துள்ளது. தற்போது, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் தற்போது அமைச்சரவையில் தங்களுக்கு இடம் வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கத் துவங்கியுள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.

அவ்வாறு, கேட்கும் பட்சத்தில் இந்த கோரிக்கை திமுகவிற்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தும் என்பதே உண்மை. ஏனெனில், மற்ற கட்சிகளும் தங்களுக்கு அங்கீகாரம் வேண்டும் என்பதற்காக அமைச்சரவையில் இடம் கேட்க தொடங்கிவிடும். அவ்வாறு கேட்கும் பட்சத்தில் அதிமுக ஒருவேளை அமைச்சரவையில் இடம் கொடுக்கவும் வாய்ப்பிருப்பதால், சில கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு தாவவும் வாய்ப்புகள் உள்ளன.

இத்தகைய சிக்கல்களை எல்லாம் தவிர்க்க, திமுக தங்களது கட்சியை பலப்படுத்துவது மிக முக்கியமான ஒன்று என்பதால், இத்தகைய விருந்துகள் முக்கியமான ஒன்றாகவே திமுக அபிமானிகளும் கருதுகின்றனர். திமுகவில் உள்ள மூத்த தலைவர்களும் வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓய்வளிக்கப்படவே அதிகம் வாய்ப்புள்ளது என்பதால், இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதற்கான ஒரு தலைவராக உதயநிதியை திமுக முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.