'நீட்' ரத்து ரகசியத்தை எப்போது சொல்வீங்க உதயநிதி?.. கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி!

கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, திமுக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கூறி இருந்தது. மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின், ''திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும்’’ என்று கூறியிருந்தார்.

Aug 17, 2024 - 15:11
 0
'நீட்' ரத்து ரகசியத்தை எப்போது சொல்வீங்க உதயநிதி?.. கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palaniswami And Udayanidhi Stalin

சென்னை: இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' என்னும் நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. மிகவும் கடினமான இந்த தேர்வுக்கு தேர்ச்சி பெற முடியாததால் ஏராளமான மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துள்ளனர். 

மாணவர்களின் உயிருக்கு உலை வைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் மத்திய அரசு எதற்கும் செவிசாய்க்காமல் தொடர்ந்து நீட் தேர்வை நடத்தி வருகிறது.

இதற்கிடையே இந்த ஆண்டு இளநிலை நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் முன்கூட்டியே வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடந்தது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, பல்வேறு முக்கிய குற்றவாளிகளை கைது செய்து வருகிறது. 

கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, திமுக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கூறி இருந்தது. மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின், ''திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும்’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு தேர்ச்சி பெற முடியாததால் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதை வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக கூறிய அந்த நீட் தேர்வு ரத்து ரகசியம் எப்போது வெளிவரும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், '' தஞ்சாவூர் மாவட்டம் சிலம்பவேளங்காடு பகுதியை சேர்ந்த மாணவர் தனுஷ், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாததால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

நீட் ரத்து என்ற பெயரில் அரசியல் நாடகம் நடத்தும் விடியா திமுக முதல்வர், தன்னுடைய ஒன்றுக்கும் உதவாத வெற்று விளம்பரப் பேச்சுகளை நம்பி ஏமாந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவர்களின் ரத்தக் கறைகள் தனது கைகளில் இருப்பதை உணரவேண்டும். 40 எம்பிக்களை வைத்து நாடாளுமன்றத்தில் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் மு.க.ஸ்டாலின்? 

வாரிசு அமைச்சர் சொன்ன அந்த நீட் ரத்து ரகசியம் எப்போது தான் வெளியில் வரும்? இன்னும் எத்தனை மாணவச் செல்வங்கள் உயிரிழப்பதை நாம் பார்க்க வேண்டும்? நீட் ரத்து விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றும் விடியா அரசுக்கு கடும் கண்டனம். இனியாவது நீட் ரத்து குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதேனும் இருப்பின் மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

மாணவச் செல்வங்களே- உயிர் என்பது இன்றியமையாத ஒன்று. அதனை இழக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் உங்கள் மனதில் வரக்கூடாது. வாழ்வில் பல சோதனைகள் வந்தாலும் அதனை நேரே எதிர்கொண்டு சாதனைக் கற்களாக மாற்றப் பாருங்கள். இந்த உலகத்தில் உங்களுக்கென்ற ஒரு அற்புதமான இடம் எப்போதும் இருக்கும் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow