Raayan: ரிலீஸுக்கு ரெடியான ராயன்... மகன்களுடன் குலதெய்வ கோயிலில் ஆஜரான தனுஷ்!
தனுஷின் 50வது படமான ராயன், வரும் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தனுஷே இயக்கியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில், தனது மகன்களுடன் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார் தனுஷ்.
சென்னை: தனுஷின் ராயன் படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்னொரு பக்கம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் படக்குழு பிஸியாக உள்ளது. நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற ராயன் ப்ரோமோஷன் விழாவில், தனுஷ், பிரகாஷ்ராஜ் உட்பட படக்குழுவினர் பங்கேற்றனர். பெரும்பாலும் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் தங்களது 50வது படத்துக்காக நல்ல கதை, திறைமையான இயக்குநர் என பார்த்து பார்த்து தேர்ந்தெடுப்பது வழக்கம்.
ஆனால், தனுஷோ தனது 50வது படத்தை அவரே இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அதேபோல், இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி என மல்டி ஸ்டார்களோடு களமிறங்கியுள்ளார். இன்னொரு பக்கம் ஏஆர் ரஹ்மானின் இசையும் ராயனுக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. ராயன் இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் அவரது மகன்கள் யாத்ரா, லிங்கா இருவரையும் அழைத்துச் சென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது குலதெய்வ கோயிலுக்கும் தனது மகன்களுடன் சென்று வந்துள்ளார் தனுஷ்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள ஸ்ரீகஸ்தூரி அம்மாள், ஸ்ரீ மங்கம்மாள், ஸ்ரீ கருப்பசாமி கோயில் தான் தனுஷின் குலதெய்வ கோயில். அதனை தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவும், அம்மா விஜயலட்சுமியும் புனரமைத்துக் கொடுத்துள்ளனர். சுமார் 76 லட்சம் மதிப்பில் இந்த கோயிலை புதுப்பித்துக்கொடுத்துள்ளனர் தனுஷின் பெற்றோர். அதேபோல் இந்த கோயில் பணிகள் 2022ம் ஆண்டு தொடங்கி 2024ல் தான் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் ராயன் படத்தின் ரிலீஸையும் மனதில் வைத்து, தனுஷ் தங்களது குலதெய்வ கோயிலுக்கு மகன்களுடன் சென்று வழிபட்டுள்ளார்.
தனுஷ், யாத்ரா, லிங்கா ஆகியோருடன் அவர்களது உறவினர்கள் சிலரும் குலதெய்வ கோயிலுக்குச் சென்றுவந்துள்ளனர். அனைவருமே தனியாக ஏசி பேருந்தில் ஆண்டிபட்டி சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனுஷ் உட்பட அனைவரும் ரொம்பவே சிம்பிளாக கோயிலுக்குச் சென்று வழிபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுபற்றி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள தனுஷ், ராயன் படத்தின் பாடல் வரிகளான “இங்கு பரந்து கிடக்கும் பூமி, உனக்கும் தந்ததைய்யா, இங்கு இருக்கும் அத்தனை சாமியும், உனக்கும் சொந்தமைய்யா...” என்ற கேப்ஷனுடன், கோயிலில் தியானத்தில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.
ராயன் கண்டிப்பாக ஹிட்டாகும் என மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள தனுஷ், இந்தப் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதன்படி, ராயன் படத்தின் ஆன்லைன் புக்கிங், சென்னை மட்டுமின்றி பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முக்கியமாக பெங்களூருவில் ராயன் படத்தின் முதல் காட்சி காலை 7 மணிக்கு திரையிடப்படுகிறது. இதற்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும், மற்ற காட்சிகளுக்கும் புக்கிங் தரமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?