“திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது” - டிடிவி தினகரன் ஆவேசம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு ஒன்றன் பின் ஒன்றாக முடக்கிவருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடப்பு கல்வியாண்டில் (2024 - 2025) 56 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் 4,533 மாணவர்களுக்கும், 5,263 மாணவிகளுக்கும் என மொத்தம் 9,796 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொகுதி வாரியாக ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்டு வருகின்றன.
விலையில்லா மிதிவண்டித் திட்டம் முதன்முதலில் மாணவிகள் தங்களது கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்டது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2001ம் ஆண்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் முன்பு உயர்நிலைக் கல்வி படிக்கும் SC/ST பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மட்டுமே இருந்தது. பின்னாளில் இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித வேறுபாடுமின்றி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு மூலமாக விநியோகம் செய்யப்படும் விலையில்லா மிதிவண்டிகள் பழுதடைந்த நிலையிலும், தரமற்ற நிலையிலும் இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தரமற்ற முறையில் விநியோகிக்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளில் இருக்கும் பழுதுகளை நீக்குவதற்கு தனி செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும், முடியாத பட்சத்தில் அந்த மிதிவண்டிகளை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம், விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம், விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டம் என தொலைநோக்கு சிந்தனையுடன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக முடக்கிவரும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் மேல்நிலைக்கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முடக்குவதையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் திமுக அரசால் லட்சக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியர்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் படிக்க: “கலைஞரின் புகழ் குறையப்போவதில்லை” - கவிஞர் வைரமுத்து பேச்சு
எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகள் தரமானதாக இருப்பதை உறுதி செய்வதோடு, தரமற்ற முறையில் மிதிவண்டிகளை வழங்கிய ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?






