BREAKING | மீண்டும் அமைச்சர் நாற்காலியில் செந்தில் பாலாஜி..... ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு!
அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26ம் தேதி நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி, தற்போது மீண்டும் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவால் 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை கடந்து இந்த ஆண்டு பவள விழாவை நிறைவு செய்துள்ளது. அதன்படி திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற திமுக பவள விழா காஞ்சிபுரத்தில் நேற்று (செப். 28) நடைபெற்றது. அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகிறார் என ஆளுநர் மாளிகை அறிவித்தது. இதையடுத்து தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, பால் வளத்துறை வழங்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, கடந்த 26ஆம் தேதி நிபந்தனை ஜாமினில் வெளிவந்தார். கரூர் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் தற்போது மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளார். இவருக்கு மீண்டும் மின்சாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜேந்திரன், திருவிடைமருதூர் தொகுதி எம்.எல்.ஏ கோவி. செழியன் மற்றும் ஆவடி தொகுதி எம்.எல்.ஏ. நாசர் ஆகியோர், இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அதன்படி கோவி. செழியனுக்கு உயர்கல்வித் துறை, நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் பூங்கொத்து வழங்கி அமைச்சர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். தமிழக அமைச்சரவை தற்போது 5வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?