இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு வந்தது. பேரறிஞர் அண்ணாவால் 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், 75 ஆண்டுகளை கடந்து பவள விழாவை நிறைவு செய்துள்ளது. அதன்படி திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற திமுக பவள விழா, நேற்று (செப். 28) காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அதேநேரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகிறார் என்ற அறிவிப்பும் ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியானது.
இதனையடுத்து இன்று (செப். 29) துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், “நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் – பொருளாளர், மாண்புமிகு அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றேன்.
‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம். அன்பும், நன்றியும்!” என பதிவிட்டு தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக தனது டிவிட்டர் பக்கத்தில் உள்ள பயோவில், துணை முதலமைச்சர் என மாற்றியுள்ளார் உதயநிதி.
முன்னதாக இன்று காலை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணாவின் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் உதயநிதி ஸ்டாலின். மேலும், “அண்ணா - கருணாநிதி காட்டிய வழியில், நம் முதலமைச்சர் ஸ்டாலினின் கரம்பற்றி அயராது உழைப்போம்” எனக் கூறினார். இந்திய அரசியல் வரலாற்றில் துணை முதலமைச்சர் பதவி என்பது பொதுவான ஒன்றாகவே இருந்துள்ளது. நீலம் சஞ்சீவ ரெட்டி, ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, எடியூரப்பா, மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இதற்கு முன்பாகத் துணை முதலமைச்சர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது இந்தியாவில் 14 மாநிலங்களில் துணை முதலமைச்சர்கள் உள்ளனர். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிகார், மேகாலயா, ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் துணை முதலமைச்சர்கள் உள்ளனர்.