ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம்.. பதக்க வாய்ப்பு பறிபோனது.. என்ன நடந்தது?

இந்திய நேரப்படி இன்று இரவு 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்க இருந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அவருக்கு தங்கம் கிடைக்கும். தோற்றாலும் வெள்ளி கிடைக்கும் என்ற பதக்க வாய்ப்பு அவருக்கு உருவாகி இருந்தது.

Aug 7, 2024 - 12:41
Aug 7, 2024 - 13:02
 0
ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம்.. பதக்க வாய்ப்பு பறிபோனது.. என்ன நடந்தது?
Vinesh Phogat

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்துள்ளது. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியாவில் இருந்து மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. 

துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கத்தையும்  தாய்நாட்டுக்காக வென்று கொடுத்தார். இதேபோல் துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு தகுதிச்சுற்று போட்டியில், இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அசத்தினார்.

ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் கியூபா நாட்டைச் சேர்ந்த குஸ்மான் லோப்ஸுடன் மோதினர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் குஸ்மான் லோப்ஸை வீழ்த்தி அபார வெறி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.

50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டி முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார். இந்திய நேரப்படி இன்று இரவு 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்க இருந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அவருக்கு தங்கம் கிடைக்கும். தோற்றாலும் வெள்ளி கிடைக்கும் என்ற பதக்க வாய்ப்பு அவருக்கு உருவாகி இருந்தது.

இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இருந்து வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத்,100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்துள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது என்று இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வினேஷ் போகத்,100 கிராம் எடை அதிகமாக இருந்ததை இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவரால் இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியாது. இதனால் வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் வினேஷ் போகத் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். காலிறுதியில் பலம் வாய்ந்த சீன வீராங்கனையை தோற்கடித்து, அரையிறுதியில்  கியூபா நாட்டின் வீராங்கனையை பந்தாடி இறுதிப்போட்டி வரை வந்த வினேஷ் போகத்தின் பதக்க கனவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சிதைத்துள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் மீது வினேஷ் போகத் உள்ளிட்ட பல்வேறு மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். பிரிஜ் பூஷனுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நீண்டநாள் போராட்டமும் நடத்தினார்கள். போராட்டம் நடத்திய வினேஷ் போகத் உள்ளிட்ட வீராங்கனைகள் தரதரவென இழுத்து செல்லப்பட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இவ்வளவு நடந்தபிறகும், மத்திய பாஜக அரசு, பிரிஜ் பூஷனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்பிறகு வினேஷ் போகத் காயத்தால் அவதிப்பட்டு குணமடைந்தார். கடும் போராட்டம், அவமானம், காயம் ஆகியவற்றை தாண்டி இறுதிப்போட்டிக்கு பதக்க கனவுடன் வந்த வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow