நவராத்திரியின் நிறைவு நாளான இன்று (அக். 11) ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தேரிவித்து வருகின்றனர்.
அதன்படி, “நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமித் திருநாளை பக்தியுடனும், பரவசத்துடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனித ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலை தெய்வமென மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி, தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாள் ஆகும்.
விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜயதசமி பண்டிகையாகும்.
மக்கள் அனைவரும் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களது வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள் புரியுமாறு, உலகிற்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறினார்.
“கல்வி, செல்வம், வீரம் இவை மூன்றையும் தரும் தெய்வங்களை வழிபடும் இந்தத் திருநாளில் - அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.
வாழ்வில் இருள் நீங்கி, கல்வி எனும் வெளிச்சம் செல்வத்தை அள்ளித் தந்திடவும், வீரம் என்னும் ஆயுதத்தை ஏந்தி உலகை வெற்றி பெற்றிடவும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடு ஏற்றம் பெறவும், உலகம் நமது தேசத்தை புகழ்ந்திடவும், நாள்தோறும் உழைக்கும் ஒவ்வொருவரையும் இந்தத் தருணத்தில் நினைவு கூர்ந்து வணங்குகிறேன்” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து கூறியுள்ளார்.
“ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என அமமுக பொதுச்செயலாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆா்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "நாட்டு குடிமக்களின் வாழ்வாதாரத்துக்கு வேலை கொடுக்க வேண்டிய அரசின் கடமையை அறப்பணியாக செய்யும் தொழில் நிறுவனங்களுக்கும், நாட்டை முன்னேற்ற உழைக்கும் தொழிலாளா்களுக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.