வாஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் களமிறங்கியுள்ளார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக இருந்தது.
ஆனால் ஜோ பைடன் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து பின்வாங்கினார். அமெரிக்க மக்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்ததாக கூறிய அவர் புதிய அதிபர் வேட்பாளராக தற்போது துணை அதிபராக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸை முன்மொழிந்தார்.
ஜோ பைடன் அதிபர் வேட்பாளர் ரேஸில் இருந்து பின்வாங்கியது யாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் டொனால்ட் டிரம்ப் உடனான நேரடி விவாதத்தில் ஜோ பைடன் மிகவும் தடுமாறினார். தொடர்ந்து வயது முதிர்வு காரணமாக மறதி பிரச்சனையை எதிர்கொண்ட பைடன், ஒரு பொது நிகழ்ச்சியில் உக்ரைன் அதிபர் பெயரை புதின் என்று மாற்றி கூறியது உள்பட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
ஜோ பைடன் இருந்தால் தோல்வி உறுதி என்று கருதிய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் அவருக்கு கடுமையான அழுத்தம் கொடுத்து அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து பின்வாங்கச் செய்தனர். பின்னர் ஜனநாயக கட்சி நிர்வாகிகள் விருப்பப்படி 59 வயதான கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், 'அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பை கண்டிப்பாக வீழ்த்துவோம்' என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அறிக்கை வெளியிட்ட அவர், '' அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவற்கு ஜனநாயக கட்சியில் எனக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது கண்டு பெருமை கொள்கிறேன்.
அடுத்த சில மாதங்களில் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறேன். எனது முழுமையான நோக்கம் நமது கட்சியையும், நமது நாட்டையும் ஒன்றிணைத்து டிரம்ப்பை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான்.
டிரம்ப் நமது நாட்டின் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் பின்னோக்கி கொண்டு செல்ல நினைக்கிறார். நான் நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தி ஒவ்வொரு தனி நபரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்த அதிபர் ஜோ பைடன், ஜனநாயக கட்சியினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
தற்போது ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தேர்வாக கமலா ஹாரிஸுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை விட அதிக ஆதரவு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 27 மாகாணங்களில் உள்ள பிரதிநிதிகள் கமலா ஹாரிஸுக்கு தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்.